பெரிய தாதம்பாளையம் ஏரிக்கு நீர்நிரப்பும் வகையில் ரூ.101 கோடியே 30 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது கலெக்டர் தகவல்


பெரிய தாதம்பாளையம் ஏரிக்கு நீர்நிரப்பும் வகையில் ரூ.101 கோடியே 30 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 24 Dec 2016 3:45 AM IST (Updated: 24 Dec 2016 3:11 AM IST)
t-max-icont-min-icon

பெரிய தாதம்பாளையம் ஏரிக்கு நீர்நிரப்பும் வகையில் ரூ.101 கோடியே 30 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் கோவிந்தராஜ் கூறினார். விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும

கரூர்,

பெரிய தாதம்பாளையம் ஏரிக்கு நீர்நிரப்பும் வகையில் ரூ.101 கோடியே 30 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் கோவிந்தராஜ் கூறினார்.

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்கியதும் முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விவசாயி ராஜாராம் பேசுகையில், வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதால் குறுவை பயிர் சாகுபடி செய்யமுடியவில்லை. சம்பா பயிரை காப்பாற்ற வடகிழக்கு பருவ மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் பொய்த்து போய் குறுவையும் சாகுபடி செய்ய முடியவில்லை. அதேபோன்று கரும்பு, வாழை, தென்னை ஆகியவை தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகிறது. மேலும் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. எனவே கரூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து இழப்பீடு பெற்று தந்து கரூர் மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்றார்.

இழப்பீடு

விவசாயி சுப்பிரமணி கூறுகையில், கரூர் மாவட்டத்தில் வறட்சி பகுதிகளை ஆய்வு செய்ய மாநில அளவில் ஒரு குழு அமைத்து அந்த குழுவினர் கரூர் மாவட்டம் முழுவதும் பார்வையிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று தற்போது விவசாயிகளின் சிரமத்தை கவனத்தில் கொண்டு விவசாயிகள் பெற்ற கடனை வசூலிப்பதை வங்கியாளர்கள் நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

இதேபோன்று விவசாயிகள் பலர், சிந்து மாட்டிற்கு வங்கிகளில் கடன் வழங்கப்படுகிறது. அதேபோன்று நாட்டு மாடு வாங்கி வளர்க்க வங்கிகள் கடன் வழங்க வேண்டும். சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். தொடர்ந்து கரூர் மாவட்ட நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தினர், சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

20 நாட்களில்...

இதையடுத்து கலெக்டர் கோவிந்தராஜ் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

இந்த ஆண்டு மழை இல்லாமல் போய்விட்டது. கரூர் மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை 652.20 மில்லி மீட்டர் பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 349.04 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. சராசரி மழை அளவை விட 46.4 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. இதனால் பயிர்கள் காய்ந்துள்ளது. விவசாயிகளின் நிலைமை குறித்து அவ்வப்போது அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு வருகிறது. காய்ந்துள்ள அனைத்து விவசாய பயிர்ளையும் கணக்கெடுத்து அரசுக்கு அனுப்பி இழப்பீட்டு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கரூர் மாவட்டத்தில் உள்ள சீமை கருவேல மரங்கள் 20 நாட்களில் அகற்றப்படும். அதற்காக மாவட்ட அளவில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

ஆராய்ச்சி நிலையம்

தொடர்ந்து விவசாயி தங்கவேல் சம்பா பயிருக்கு வழங்கும் மானியத்தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்று கூறினார். அமராவதி நதிநீர் பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் கரூர் மாவட்டத்தில் பசுமை குடில் அமைக்க வேண்டும். அமராவதி ஆற்றங்கரையோரம் அதிக அளவு கீரை வகைகள் பயிர் செய்ய வேண்டும் என்று கூறினர். உழவர் பாதுகாப்பு மன்ற அமைப்பாளர் செல்வராஜ், அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை ஆராய்ச்சி நிலையம், கொள்முதல் நிலையம், குளிர்பதன கிடங்கு ஆகியவை அமைக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

உபரி நீர்

விவசாயி ராஜமாணிக்கம் விவசாய பயிர்களை சேதப்படுத்தும் மயில்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறினார். அதற்கு பதில் அளித்த கலெக்டர், மயில்களை கொல்ல மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்வது இயலாத காரியமாகும். விவசாய பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டால் பயிர் மதிப்பீடு பெற்று அனுப்பி வைத்தால் நடவடிக்கை எடுத்து இழப்பீட்டு வழங்கப்படும் என்றார். தொடர்ந்து தாதம்பாளையம் ஏரி நீர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் மழைக்காலங்களில் அமராவதி ஆற்றில் ஏற்படும் உபரி நீரை தாதம்பாளையம் ஏரிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

திட்ட மதிப்பீடு

அதற்கு பதில் அளித்த கலெக்டர் நஞ்சைத்தலையூர் அணைக்கட்டில் இருந்து உபரி நீர் 24 கிலோ மீட்டர் தூரம் திறந்த வெளி கால்வாய் மூலம் கொண்டு செல்லப்பட்டு சின்ன முத்தாம்பாளையம் என்ற இடத்தில் பெரிய தாதம்பாளையம் ஏரிக்கு நீர் நிரப்பும் வகையில் ஆய்வு செய்யப்பட்டு ரூ.101 கோடியே 30 லட்சத்திற்கு ஒரு திட்ட மதிப்பீடும், அதேபோன்று அமராவதி ஆற்றில் அணைப்புதூர் அணைக்கட்டில் இருந்து உபரி நீர் பம்பிங் செய்து பைப் லைன் மூலம் எடுத்து செல்லப்பட்டு ஆண்டிசெட்டிப்பாளையம் என்ற இடத்தில் பெரியதாதம்பாளையம் ஏரிக்கு ஏற்கனவே உள்ள வரத்துக்கால்வாய் தொடங்கும் இடத்தில் விடப்பட்டு ஏரிக்கு நீர் நிரப்பும் வகையில் ஆய்வு செய்யப்பட்டு, இதற்காக ரூ.35½ கோடி திட்ட மதிப்பீடும் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று கூறினார். தொடர்ந்து அவர் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றார். கூட்டத்தில் அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story