ஆபத்தான நிலையில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க அவசர ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தலாம் அதிகாரி தகவல்
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் திட்டம் போல கால்நடைகளுக்கு உதவுவதற்காக இலவச அவசர ஆம்புலன்ஸ் திட்டம் அக்டோபர் 21–ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ரூ.6 கோடியே 33 லட்சம் செலவில் இந்த திட்டம் திருச்சி, தஞ்சை, நாமக்கல், மதுரை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில்
திருச்சி
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் திட்டம் போல கால்நடைகளுக்கு உதவுவதற்காக இலவச அவசர ஆம்புலன்ஸ் திட்டம் அக்டோபர் 21–ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ரூ.6 கோடியே 33 லட்சம் செலவில் இந்த திட்டம் திருச்சி, தஞ்சை, நாமக்கல், மதுரை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்த திட்டத்தை பயன்படுத்தி ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு அவசர மற்றும் உயிர்காக்கும் சிகிச்சை இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. இலவச தொலைபேசி எண் 1962–க்கு தொடர்பு கொண்டால் அவசர ஆம்புலன்சுடன் மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிகிச்சை அளிப்பார்கள். இந்த ஆம்புலன்ஸ் மூலம் இதுவரை 15 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய தலைவருமான ரிச்சர்டு ஜெகதீசன் கூறுகையில், “இந்த அவசர ஆம்புலன்சில் ஒரு மருத்துவர், ஒரு உதவியாளர், ஓட்டுனர் என 3 பேர் இருப்பார்கள். திருச்சி மாவட்டத்தில் 2 ஆம்புலன்ஸ்கள் உள்ளன. இதில் உபகரணங்கள் மற்றும் மருந்து வசதிகள் அனைத்தும் உள்ளன. தேவைப்படும் பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற மக்கள் ஆபத்தான நிலையில் இருந்து தங்களது கால்நடைகளை பாதுகாக்க இந்த ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும்“ என்றார்.