சிவகங்கை அருகே வெட்டு காயங்களுடன் வாலிபர் பிணம் காதல் தகராறில் கொலை செய்யப்பட்டாரா என போலீஸ் விசாரணை


சிவகங்கை அருகே  வெட்டு காயங்களுடன் வாலிபர் பிணம் காதல் தகராறில் கொலை செய்யப்பட்டாரா என போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 25 Dec 2016 4:30 AM IST (Updated: 24 Dec 2016 6:25 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை அருகே இடையமேலூர் பகுதியில் வாலிபர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். காதல் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். வாலிபர் பிணம் சிவகங்கை அருகே இடையமேலூர் உசிலம்பட்டி விலக்கு ரோடு அருகே முட

சிவகங்கை,

சிவகங்கை அருகே இடையமேலூர் பகுதியில் வாலிபர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். காதல் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

வாலிபர் பிணம்

சிவகங்கை அருகே இடையமேலூர் உசிலம்பட்டி விலக்கு ரோடு அருகே முட்புதர் பகுதியில் வாலிபர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தார். அந்த பகுதியில் ஆடு மேய்க்க சென்றவர்கள் இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி வாலிபர் இறந்து கிடந்த இடத்திற்கு, சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு மங்களேசுவரன், தாலுகா இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) மோகன் மற்றும் சிவகங்கை தாலுகா போலீசார் வந்து விசாரணை நடத்தினர். அப்போது இறந்து கிடந்த வாலிபரின் தலையில் மட்டுமே வெட்டுக்காயங்கள் இருந்தன. கொலை செய்யப்பட்டு கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரங்கள் தெரியவில்லை. இறந்து கிடந்த நபருக்கு சுமார் 25 வயது இருக்கும். மாநிற தேகம், 6 அடி உயரம், ஒல்லியான உடல் அமைப்புடன இருந்தார். நீல கலரில் டவுசர் அணிந்திருந்தார். அவரது கழுத்தில் துணி சுற்றப்பட்டிருந்தது. அத்துடன் கட்டம் போட்ட கைலி ஒன்றும் இருந்தது. மேலும் அவரது மார்பில் இந்ரா என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது. அவரது வலது கையில் பச்சையால் பல்வேறு ஓவியங்கள் வரைந்தும், கை விரலில் தேள் பச்சையும் வரையப்பட்டிருந்தது.

போலீசார் விசாரணை

இதனைத்தொடர்ந்து போலீஸ் மோப்ப நாய் கொண்டு வரப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் சென்று விட்டு திரும்பிவிட்டது. இதனால் அதன் மூலமும் துப்பு கிடைக்கவில்லை. இந்த வாலிபரை வேறு இடத்தில் வெட்டி கொலை செய்துவிட்டு, உடலை இங்கு வந்து போட்டு விட்டு சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த வாலிபர் காதல் தகராறில் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் வாலிபர் பிணம் கிடந்த பகுதி மதுரை மாவட்டத்தின் மிக அருகில் உள்ளது. எனவே மதுரை மாவட்டம் மேலூர் பகுதி அல்லது அதனை ஒட்டியுள்ள திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் இருந்து அவரை கொலை செய்து, உடலை கொண்டு வந்து இங்கு போட்டு விட்டுசென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலும், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களின் போலீஸ் நிலையங்களுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story