சந்தவாசல் அருகே கொள்ளையர்கள் நகை பறித்தபோது மோட்டார்சைக்கிளிலிருந்து கீழேவிழுந்த பெண் சாவு கொலை வழக்காக மாற்றி மர்மநபர்களுக்கு வலைவீச்சு


சந்தவாசல் அருகே கொள்ளையர்கள் நகை பறித்தபோது மோட்டார்சைக்கிளிலிருந்து கீழேவிழுந்த பெண் சாவு கொலை வழக்காக மாற்றி மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Dec 2016 2:15 AM IST (Updated: 24 Dec 2016 7:37 PM IST)
t-max-icont-min-icon

சந்தவாசல் அருகே மர்மநபர்கள் நகை பறித்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி மர்மநபர்களை தேடி வருகிறார்கள். உறவினர் வீட்டு நிகழ்ச்சி கலசபாக்கம் அருகேயுள்ள கீழ்வன்னியனூ

கண்ணமங்கலம்,

சந்தவாசல் அருகே மர்மநபர்கள் நகை பறித்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

உறவினர் வீட்டு நிகழ்ச்சி

கலசபாக்கம் அருகேயுள்ள கீழ்வன்னியனூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிவாசகம் (வயது 55), விவசாயி. இவருடைய மனைவி சாந்தி (50). கணவன்–மனைவி இருவரும் கடந்த 20–ந் தேதி மாலை கண்ணமங்கலம் அருகேயுள்ள கீழ்நகரில் வசிக்கும் உறவினர் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

திருவண்ணாமலை–வேலூர் பிரதான சாலையில் பால்வார்த்து வென்றான் பகுதியில் பாலம் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே அப்பகுதியில் வாகனங்கள் மெதுவாக செல்ல சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. மணிவாசகம் சென்ற மோட்டார் சைக்கிள் அந்த வேகத்தடை அருகே மெதுவாக சென்றது. அப்போது பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் சாந்தி அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினர்.

சிகிச்சை பலனின்றி சாவு

கொள்ளையர்கள் நகைபறித்தபோது சாந்தி மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை உள்பட பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலுதவிக்கு பின்னர் சாந்தி மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

கொலை வழக்காக மாற்றம்

இது குறித்து சந்தவாசல் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வந்தார். இந்த நிலையில் சாந்தி உயிரிழந்ததை அடுத்து நகைபறிப்பு வழக்கை கொலை வழக்காக மாற்றி வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் தப்பிசென்ற மர்மநபர்களை தேடி வருகிறார். மர்மநபர்கள் நகைபறித்தபோது மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சாந்தி உயிரிழந்த சம்பவம் கீழ்வன்னியனூர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story