நாகை மாவட்டத்தில் 142 பயனாளிகளுக்கு ரூ.24 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது கலெக்டர் பழனிசாமி தகவல்
நாகை மாவட்டத்தில் இதுவரை 142 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– கல்வி உதவித்தொகை தமிழக முதல்–அமைச்சரின்
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டத்தில் இதுவரை 142 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் பழனிசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கல்வி உதவித்தொகைதமிழக முதல்–அமைச்சரின் ஆணையின்படி நாகை மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெற்றோரை இழந்த, ஆதரவற்ற நிலையில் இருக்கும் குழந்தைகள் மற்றும் எச்.ஐ.வி. பாதிப்புக்குள்ளான குழந்தைகளை கண்டறிந்து அவர்களின் கல்வி உதவிக்காக செயல்படுத்தப்படும் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் கடந்த 2013–14, 2014–15 மற்றும் 2015–16–ம் நிதியாண்டுகளில் 142 பயனாளிகளுக்கு மாதம் ரூ.2000 வீதம் ரூ.23 லட்சத்து 94 ஆயிரம் நிதிவழங்கப்பட்டுள்ளது. மேலும், நாகை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளித்திடும் வகையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தலைமையில், காவல்துறை அலுவலர்கள், ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்கள், சமூக நல பணியாளர்கள், தொழிலாளர் நல அலுவலர், சைல்டுலைன் பணியாளர்கள் மற்றும் தொண்டு நிறுவன பணியாளர்கள் ஆகியோர்களை உள்ளடக்கிய குழுவினர் திருக்கடையூர், வேளாங்கண்ணி, நாகூர் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, இதுவரை 11 குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களின் பெற்றோர்களுக்கு எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரை வழங்கப்பட்டு குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குழந்தை தொழிலாளர்கள் மீட்புமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள், தொழிலாளர் நல அலுவலர்களுடன் இணைந்து மாவட்டத்திலுள்ள பல பகுதிகளில் ஆய்வு செய்து கடந்த 2013–ம் ஆண்டு முதல் இன்று வரை 80 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 22 குழந்தைகள் நாகை அரசு தொழிற் பயிற்சி மையத்தில் குறுகிய கால பயிற்சியிலும், 38 குழந்தைகள் அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளிலும், கணினி பயிற்சியில் 5 குழந்தைகளும் சேர்த்துவிடப்பட்டுள்ளனர். நாகை மாவட்டத்தில் 2013–ம் ஆண்டு முதல் இதுவரை 33 குழந்தை திருமணங்கள் மாவட்ட சமூக நல அலுவலருடன் இணைந்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அவர்களில் 19 குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்து படிக்கவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 2 குழந்தைகளை குழந்தைகள் இல்லத்தில் தங்கவைத்து பள்ளி படிப்பை தொடர செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களிலிருந்து படிக்க இயலாத சூழ்நிலையிலுள்ள குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள் ஆகிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் 151 குழந்தைகள் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டு அவர்களில் 25 குழந்தைகள், குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களிலும், பள்ளிகளிலும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் சேர்த்துவிடப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பெற்றோரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் 15 பேர் மீட்கப்பட்டு, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள அரசு பதிவு பெற்ற தத்து வள மையங்களுக்கு தத்து கொடுக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.