வக்கீல்களின் சிறந்த வாதங்கள் தான் நல்ல தீர்ப்புக்கு வழி வகுக்கும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி நாகமுத்து பேச்சு


வக்கீல்களின் சிறந்த வாதங்கள் தான் நல்ல தீர்ப்புக்கு வழி வகுக்கும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி நாகமுத்து பேச்சு
x
தினத்தந்தி 25 Dec 2016 3:00 AM IST (Updated: 25 Dec 2016 12:27 AM IST)
t-max-icont-min-icon

வக்கீல்களின் சிறந்த வாதங்கள் தான் நல்ல தீர்ப்புக்கு வழி வகுக்கும் என்று நெல்லையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி நாகமுத்து கூறினார். மூத்த வக்கீல் படம் திறப்பு விழா மறைந்த மூத்த வக்கீல் கருப்பையா உருவ படம் திறப்பு விழா நெல்லையில்

நெல்லை,

வக்கீல்களின் சிறந்த வாதங்கள் தான் நல்ல தீர்ப்புக்கு வழி வகுக்கும் என்று நெல்லையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி நாகமுத்து கூறினார்.

மூத்த வக்கீல் படம் திறப்பு விழா

மறைந்த மூத்த வக்கீல் கருப்பையா உருவ படம் திறப்பு விழா நெல்லையில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது. தொடக்க நிகழ்ச்சிக்கு ஐகோர்ட்டு மதுரை கிளை அரசு வக்கீல் செல்வகுமார் வரவேற்று பேசினார். சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நாகமுத்து, மகாதேவன் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் விழா மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த வக்கீல் கருப்பையா படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து நெல்லை வக்கீல் சங்கத்துக்கு புதிய இணையதளம் தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி நாகமுத்து பேசியதாவது:–

தமிழ் மொழி தொன்மையான மொழி. நமது மொழியில் ஏராளமான இலக்கியங்கள், கவிதைகள், புத்தகங்கள் எழுதப்பட்டு உள்ளன. அனைத்துவிதமான விசயங்களும் தமிழ் மொழியில் கூறப்பட்டு உள்ளன. இங்கு பேசிய நீதிபதி மகாதேவன் ஆழமான கருத்துகளை எடுத்து வைத்தார்.

நல்ல தீர்ப்பு

நான் குற்றவியல் வழக்குகளில் நல்ல தீர்ப்பை கூறியதாக இங்கு பேசியவர்கள் கூறினார்கள். அதற்கு என்ன காரணம்? என்று எண்ணிப்பார்க்க வேண்டும். நல்ல பழங்களில் பிழிந்தால் தான் நல்ல ஜூஸ் கிடைக்கும். அழுகிய பழங்களில் பிழிகின்ற ஜூஸ் நன்றாக இருக்காது.

அதேபோல் சிறந்த வக்கீல்களின் வாதங்கள் தான் நல்ல தீர்ப்பாக கூற முடிந்தது. சரியில்லாத வாதங்கள் இருந்தால் எப்படி நல்ல தீர்ப்பு கூற முடியும். வக்கீல்களின் சிறந்த வாதங்கள் தான் நல்ல தீர்ப்புக்கு வழி வகுக்கும். எனவே வக்கீல்கள் ஒரு வழக்கை எடுத்து வாதாடும் போது, அதில் உள்ள அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். எதிர் கேள்விகள் வராதவாறு வாதாட வேண்டும்.

இளம் வக்கீல்கள் மூத்த வக்கீல்களின் வழக்குகளை பின்பற்ற வேண்டும். அவர்களிடம் வாதாடும் திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். அறிவும், அனுபவமும் உரசும் போது ஞானம் பிறக்கும். அத்தகைய ஞானத்தை நீங்கள் பெற வேண்டும். வக்கீல்களுக்கும் சமுதாய பொறுப்பு, கடமை உள்ளது. அவற்றை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு நீதிபதி நாகமுத்து பேசினார்.

கோர்ட்டில் ஆய்வு

முன்னதாக நீதிபதிகள் நாகமுத்து, மகாதேவன் நெல்லை கோர்ட்டில் ஆய்வு செய்தனர். அவர்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை பற்றி ஆய்வு செய்தேன். ஆவணங்களை பார்வையிட்ட பின்னர், அனைத்து வழக்குகளையும் விரைந்து முடிக்குமாறு நீதிபதிகளுக்கு அறிவுறுத்தினர். தொடர்ந்து கோர்ட்டு வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், இன்பதுரை எம்.எல்.ஏ., நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர், நெல்லை அரசு வக்கீல் சங்க செயலாளர் ராஜேஸ்வரன், துணை தலைவர் ஜெயபிரகாஷ், மூத்த வக்கீல்கள் வள்ளிநாயகம், மங்களா ஜவகர்லால், கதிர்வேல், நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை நெல்லை வக்கீல் சங்கம், மறைந்த மூத்த வக்கீல் கருப்பையா நினைவு அறக்கட்டளை குழு ஆகியவை இணைந்து செய்து இருந்தன.


Next Story