முதியோர் உதவித்தொகை வழங்கக்கோரி சாலை மறியல் செய்ய முயற்சி
தேனி மாவட்டம் கம்பம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முதியோர் உதவித்தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள சுமார் 100–க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளன
கம்பம்,
தேனி மாவட்டம் கம்பம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முதியோர் உதவித்தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள சுமார் 100–க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் தேவாரம், தே. மீனாட்சிபுரம், மேட்டுப்பட்டி, தே.ரங்கநாதாபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள முதியோர்கள் உதவித்தொகை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கம்பத்தில் 20–க்கும் மேற்பட்ட முதியோர்கள் காந்திசிலை அருகே கூடி பஸ் மறியல் நடத்துவதாக கூறி திரண்டனர்.
அப்போது அங்கு வந்த போக்குவரத்து போலீசார், முன் அனுமதியில்லாமல் போராட்டம் நடத்தக் கூடாது என்றும், இது சம்பந்தமாக தாலுகா அலுவலகத்தில் மனு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதனை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.