வைகை அணையில் மதுரை மண்டல தலைமை பொறியாளர் திடீர் ஆய்வு


வைகை அணையில் மதுரை மண்டல தலைமை பொறியாளர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 25 Dec 2016 4:00 AM IST (Updated: 25 Dec 2016 1:08 AM IST)
t-max-icont-min-icon

சீரமைப்பு பணிகளில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார் எதிரொலியாக வைகை அணையில் மதுரை மண்டல தலைமை பொறியாளர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். வைகை அணை தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. 77 அடி உயரமுள்ள இந்த அணை 10 சதுர மைல் சுற்றளவில் அமை

கண்டமனூர்,

சீரமைப்பு பணிகளில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார் எதிரொலியாக வைகை அணையில் மதுரை மண்டல தலைமை பொறியாளர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வைகை அணை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. 77 அடி உயரமுள்ள இந்த அணை 10 சதுர மைல் சுற்றளவில் அமைக்கப்பட்டுள்ளது. அணையில் 6091 மில்லியன் கனஅடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இந்த அணையின் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் ஆண்டிப்பட்டி, தேனி, உசிலம்பட்டி, மதுரை, பேரையூர் வரை உள்ள அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் தென்மேற்கு வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் நீர்ப்பிடிப்பு பகுதிகள் வறண்டு போய் வரலாறு காணாத வகையில் அணையின் நீர்மட்டம் 23 அடியாக குறைந்து விட்டது.

சீரமைப்பு பணிகள்

ஏற்கனவே 2 மாதங்களுக்கு முன்பு விவசாயத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் அடைக்கப்பட்ட நிலையில் ஆண்டிப்பட்டி மற்றும் மதுரை குடிநீர் திட்டங்களுக்கு மட்டும் வினாடிக்கு 40 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது அணையில் நீர்இருப்பு வேகமாக குறைந்து சேரும், சகதியுமாக உள்ளது. எனவே குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

இந்த நிலையில் அணையை பலப்படுத்தும் நோக்கத்தில் தற்போது கரைகளை பலப்படுத்தவும், நீர் வடி வாய்க்கால்கள் அமைத்தல், கழிவுநீர் சுரங்க அடைப்புகளை சுத்தம் செய்தல் உள்பட பல்வேறு சீரமைப்பு பணிகளுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. மேலும் மத்திய சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் வைகை அணை பூங்காவை மேம்படுத்துவதற்காக ரூ.4 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.

அதிகாரிகள் ஆய்வு

இதைத்தொடர்ந்து மதுரை மண்டல தலைமை பொறியாளர் சங்கர் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் நேற்று வைகை அணையை ஆய்வு செய்தனர். அப்போது நீர்ப்பிடிப்பு, கரை, பூங்கா பகுதியில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தனர். மேலும் ஆற்றில் உள்ள ஆகாயத்தாமரையை அகற்றும் பணிகளையும் பார்வையிட்டனர். இந்த ஆய்வு குறித்த அறிக்கை விரைவில் தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

வைகை அணையை நேற்று மதுரை மண்டல அதிகாரிகள் ஆய்வு செய்த சம்பவம் பொதுப்பணித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story