வால்பாறையில் அட்டகாசம் வீட்டின் சமையல் அறையை சேதப்படுத்திய காட்டு யானைகள் தேயிலை தோட்டத்தில் சுற்றி வருவதால் பொதுமக்கள் பீதி


வால்பாறையில் அட்டகாசம் வீட்டின் சமையல் அறையை சேதப்படுத்திய காட்டு யானைகள் தேயிலை தோட்டத்தில் சுற்றி வருவதால் பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 25 Dec 2016 3:15 AM IST (Updated: 25 Dec 2016 1:29 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் வீட்டின் சமையல் அறையை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன. பின்னர் அந்த யானைகள் தேயிலை தோட்டத்தில் சுற்றி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். காட்டு யானைகள் அட்டகாசம் கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள லோயர்பாரளை எஸ்டே

வால்பாறை,

வால்பாறையில் வீட்டின் சமையல் அறையை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன. பின்னர் அந்த யானைகள் தேயிலை தோட்டத்தில் சுற்றி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

காட்டு யானைகள் அட்டகாசம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள லோயர்பாரளை எஸ்டேட் பகுதியில் கடந்த 3 நாட்களாக 8 யானைகள் அந்த பகுதியில் சுற்றி திரிந்து வருகிறது. வால்பாறை வனச்சரக வனத்துறையினர் அந்த காட்டு யானைகளை வனப்பகுதிகளுக்குள் பாதுகாப்பாக துரத்துவதற்கு முயற்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த 8 காட்டு யானைகள் கொண்ட கூட்டம் சம்பவத்தன்று அதிகாலை 1.45 மணிக்கு லோயர் பாரளை எஸ்டேட் குடியிருப்புக்குள் புகுந்தன. பின்னர் அவை எஸ்டேட் பொது மேலாளரின் வீட்டின் நுழைவு வாயில் கதவை உடைத்து சேதப்படுத்தியது. பின்னர் அங்கிருந்து சென்ற காட்டுயானைகள் அருகில் இருந்த ஆனைமலை கிளப் மேலாளர் சுதர்சன் என்பவரின் வீட்டின் சுற்றுச்சுவரை உடைத்து உள்ளே புகுந்தன. அதன்பிறகு சமையல் அறையின் சுவரையும், ஜன்னலையும் உடைத்தன. பின்னர் வீட்டிற்குள் புகுந்து சமையல் அறையிலிருந்த அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்களை எடுத்து சாப்பிட்டு விட்டு சென்று உள்ளது.

பெண் உயிர் தப்பினார்

அப்போது வீட்டில் தனியாக இருந்த சுதர்சனின் தாயார் வனஜா(வயது 51) சத்தம் கேட்டு படுக்கை அறையில் இருந்து சமையல் அறைக்கு சென்று உள்ளார். அங்கு யானைகள் நிற்பதை பார்த்து பீதியில் படுக்கை அறைக்குள் பதுங்கி கொண்டார். பின்னர் அவர் வால்பாறை வனச்சரக மனித வனவிலங்கு மோதல் தடுப்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வால்பாறை வனச்சரக மனித வனவிலங்கு மோதல் தடுப்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு சமையல் அறையை உடைத்து அங்கிருந்த பொருட்களை யானைகள் சேதப்படுத்தி கொண்டு இருப்பதை பார்த்த வனத்துறையினர் டார்ச் லைட் அடித்தும், பட்டாசு வெடித்தம், சத்தம் போட்டும் விரட்டியடித்தனர்.

தேயிலை தோட்டத்தில் உலா

பின்னர் வீட்டுக்குள் புகுந்து அங்கு பீதியில் நடுங்கி கொண்டு இருந்த வனஜாவை மீட்டு அருகில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்பில் தங்க வைத்து உள்ளனர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் யானைகள் உலா வருவதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது:–

வனப்பகுதியில் இருந்து உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைகள் வர தொடங்கி இருப்பதால் நிம்மதியாக வீட்டில் இருக்க முடியவில்லை. எனவே யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் வனப்பகுதியிலேயே யானைகளுக்கு உணவு, தண்ணீர் கிடைக்கவும், குடியிருப்புகளை சுற்றி அகழி வெட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

கண்காணிப்பு

இது தொடர்பாக வனத்துறையினர் கூறும் போது, தொடர்ந்து யானைகள் தேயிலை தோட்டங்களில் சுற்றி வருவதால் பச்சை தேயிலை பறிக்க தொழிலாளர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம். மேலும் கூட்டமாக நிற்கும் யானைகளை தொந்தரவு செய்யவும் கூடாது. யானைகள் குடியிருப்புக்குள் வராமல் இருக்க அதன் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றனர்.


Next Story