ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சாதகமான தீர்ப்பு வரும் பெரம்பலூரில் இல.கணேசன் எம்.பி. பேட்டி


ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சாதகமான தீர்ப்பு வரும் பெரம்பலூரில் இல.கணேசன் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 25 Dec 2016 3:45 AM IST (Updated: 25 Dec 2016 2:23 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சாதகமான தீர்ப்பு வரும் என்று பெரம்பலூரில் இல.கணேசன் கூறினார். இல.கணேசன் எம்.பி. பேட்டி பெரம்பலூரில் ஸ்ரீராமகிருஷ்ணர், ஸ்ரீசாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் பக்தர்களின் 24–வது மாநில மாநாடு நடந்து வருகிறது. மாநாட்டிற்கு வருகை தந்த

பெரம்பலூர்

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சாதகமான தீர்ப்பு வரும் என்று பெரம்பலூரில் இல.கணேசன் கூறினார்.

இல.கணேசன் எம்.பி. பேட்டி

பெரம்பலூரில் ஸ்ரீராமகிருஷ்ணர், ஸ்ரீசாரதாதேவி, சுவாமி விவேகானந்தர் பக்தர்களின் 24–வது மாநில மாநாடு நடந்து வருகிறது. மாநாட்டிற்கு வருகை தந்த பா.ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தங்கநாற்கர சாலை, பொக்ரான் அணுசக்தி பரிசோதனை, சாதாரணமானமக்கள் கூட தற்போது பயன்படுத்தும் செல்பேசி போன்ற எண்ணற்ற சாதனைகளை செய்தவர். இந்திய நதிகளை இணைப்பதற்காக மகாநதி, கிருஷ்ணா, கோதாவரியுடன் காவிரி நதிநீரை இணைக்கும் திட்டத்தை உருவாக்கியவர். அதற்கு பிறகு நதிநீர் இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டது. துறைமுகங்கள் இணைப்பு, விமானநிலையங்கள் இணைப்பு, விண்வெளி இணைப்பு போன்ற திட்டங்களை செயல்படுத்தியவர் வாஜ்பாய்.

இவ்வாறு அவர் கூறினார். இதனைத்தொடர்ந்து இல.கணேசனிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் விவரம் வருமாறு:–

மின்னணு பணபரிவர்த்தனை

கேள்வி: மின்னணு பணபரிவர்த்தனை திட்டம் எப்படி செல்கிறது.

பதில் : பொருளாதாரத்திற்கு நிகராக கருப்பு பண பொருளாதாரம் நாட்டை பாதித்து வருகிறது. பிரதமர் நரேந்திரமோடி கொண்டுவந்த இந்த திட்டம் பலபேருடைய வயிற்றில் புளியை கரைத்துள்ளது. மக்கள் பாதிக்கப்படுவது உண்மைதான். ஆனால் இனி கணக்கில் காட்டாத இரட்டை பரிவர்த்தனை இருக்காது. எல்லாவற்றுக்கும் ஒரே விலைதான் என்ற நிலைஏற்படும். முறையற்ற பண பரிவர்த்தனைக்கு செல்போனில் ஆப்பு (மொபைல் ஆப்) வைத்தாகிவிட்டது.

கேள்வி: ஜல்லிகட்டுக்கு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்குமா?

பதில்: ஜல்லிக்கட்டு இல்லாமல் தமிழகத்தில் பொங்கல் விழா சிறக்காது. உச்சநீதிமன்றம் இதுதொடர்பான தீர்ப்பை நிறுத்திவைத்துள்ளது. இந்த தாமதம் நல்லதல்ல. இருப்பினும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு சாதகமான தீர்ப்பு வரும். பா.ஜனதா ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறது.

வருமான வரி சோதனை

கேள்வி: மற்றமாநிலங்களைவிட தமிழ்நாட்டில் வருமான வரி சோதனை அதிகம் நடக்கிறதே?

பதில்: சி.பி.ஐ. துறைக்கு கிடைத்த அதிகாரபூர்வ ஆதாரங்கள் அடிப்படையில் இந்த சோதனை நடக்கிறது. மற்றமாநிலங்களைவிட சோதனை நடத்தக்கூடிய இடங்களும், ஆட்களும் தமிழகத்தில் அதிகமாக இருக்கின்றன. இதில் சி.பி.ஐ. சுயமாக, சுதந்திரமாக நடந்து வருகிறது. இதுபோன்று தொடர்ந்து நடக்கவேண்டும்.அப்போதுதான் அரசுஅதிகாரிகள் லஞ்சம் வாங்குவதில்லை என முடிவெடுக்கும் நிலை ஏற்படும்.

கேள்வி: சேகர்ரெட்டி, தலைமைச்செயலாளர் இல்லங்களை தொடர்ந்து தலைமை செயலகத்திலும் சோதனை நடத்தி உள்ளார்களே?

பதில்: இந்த சோதனை நாட்டு நன்னை கருதி நடந்துள்ளது. மேலும் ரூபாய் நோட்டு நலன்கருதியும்கூட. தவறு செய்பவர்கள் இனி தப்பிக்ககூடாது. உயர்மதிப்பு ரூபாய் நோட்டு நீக்கத்தில் சிறப்பாக பணியாற்றிய வங்கிஅதிகாரிகளுக்கு எங்களது பாராட்டுக்கள். பிரதமர் நரேந்திரமோடிக்கு கெட்டபெயர் ஏற்படவேண்டும் என்று ஒருஅமைப்பை சேர்ந்த வங்கிஊழியர்கள் செயல்படுகிறார். விசாரணைக்கு பிறகு அவர்களது பெயருடன் வெளிவரும்.

கேள்வி: தமிழ்நாட்டில் பா.ஜனதா கட்சியின் தற்போதைய நிலைப்பாடு என்ன?

பதில்: அடுத்தவர் பலத்தில் அல்லது இக்கட்டான காலசூழலில் வளர்வது பா.ஜனதாகட்சியின் கொள்கை அல்ல. அடுத்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தி.மு.க.விற்கு மாற்றாக பா.ஜனதா உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கேள்வி: தற்போதைய தமிழகஅரசின் நிலை எப்படி உள்ளது?

பதில்: ஜெயலலிதா மறைந்து சிலநாட்களே ஆன நிலையில் துக்கம் கடைபிடிக்கப்பட்டு தற்போதுதான் சகஜநிலை திரும்பிஉள்ளது. தமிழக அரசு நல்லது செய்தால் பாராட்டுவோம். நல்லது அல்லாதது செய்தால் விமர்சிப்போம்.

கேள்வி: மேற்குவங்க முதல்–மந்திரி மம்தாபானர்ஜி தனது உயிருக்கு பிரதமரால் ஆபத்து என்று கூறிவருகிறாரே?

பதில்: அவரது பேச்சு கவுரவமாக, கண்ணியமாக இல்லை. மம்தாபானர்ஜி பலவீனப்பட்டு இருக்கிறார். பொறுப்பில்லாத முதல்–மந்திரியாக உள்ளார்.

கேள்வி: நரேந்திரமோடியின் மேக் இந்தியா திட்டத்திற்கு ஆதரவு எப்படி இருக்கிறது?

பதில்: இந்திய மக்களிடம் அன்னிய மோகம் அதிகமாகஉள்ளது. சிலபொருட்களை நம்மால் உற்பத்திசெய்யமுடியவில்லை. ஆகவே சீனப்பொருட்களை அனுமதிக்கிறோம். மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது அரசின்கடமை.

கேள்வி: டாக்டர் ராமதாஸ், காங்கிரஸ் கட்சியினர் ஜெயலலிதா மறைவு குறித்து அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவபரிசோதனை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று கேட்கின்றனரே?

பதில்: நேதாஜி மரணம் உள்ளிட்ட பலரது மரணங்கள் மர்மமாகவே உள்ளன. ஜெயலலிதா மரணம் குறித்து மக்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் தமிழக அரசு அதனை தெளிவுபடுத்திடவேண்டும்.

கேள்வி: தமிழக மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வது தொடர்ந்து வருகிறது. இதனை மத்தியஅரசு தடுக்கவில்லையா?

பதில்: இந்திராகாந்தி, மத்திய மந்திரிசபையை ஆலோசனை செய்யாமல், சிரிமாவோ பண்டாரநாயக தொலைபேசியில் கேட்டார் என்று கச்சதீவை தாரைவார்த்து விட்டார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் 100–க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். தற்போதைய பா.ஜனதா அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால் ஒரு மீனவர் கூட பலியாகவில்லை. தமிழக மீனவர்களை 60 நாட்கள் சிறைவைப்பது என்பதுகூட 20 நாட்களாக குறைந்துள்ளது.

காவிரி நதிநீர் பிரச்சினை

கேள்வி: காவிரி நதிநீர்பிரச்சினைக்கு பா.ஜனதா கட்சி தீர்வு காணுமா?

பதில்: கர்நாடக மக்களிடத்தில் பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மை குறைவாக உள்ளது. தற்போது கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் காவிரிநதியில் நமக்கு தண்ணீர்வரவில்லை. தேசிய நதிநீர் மேலாண்மை ஆணையம் சுதந்திரமான அமைப்பாக மாறினால் மட்டுமே காவிரிநதிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு இல.கணேசன் எம்.பி. தெரிவித்தார். இந்த பேட்டியின்போது பா.ஜனதா கட்சி திருச்சி கோட்டபொறுப்பாளர் சிவசுப்ரமணியன், மாவட்ட தலைவர் சாமி.இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Next Story