புதுக்கோட்டை ராமசந்திரன்–திண்டுக்கல் ரத்தினம் சேகர் ரெட்டி கூட்டாளிகளிடம் வருமான வரி அதிகாரிகள் சோதனை முக்கிய ஆவணங்கள் சிக்கின


புதுக்கோட்டை ராமசந்திரன்–திண்டுக்கல் ரத்தினம் சேகர் ரெட்டி கூட்டாளிகளிடம் வருமான வரி அதிகாரிகள் சோதனை முக்கிய ஆவணங்கள் சிக்கின
x
தினத்தந்தி 25 Dec 2016 4:00 AM IST (Updated: 25 Dec 2016 2:43 AM IST)
t-max-icont-min-icon

சேகர் ரெட்டியின் கூட்டாளிகளாக செயல்பட்ட புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின. சேகர் ரெட்டி கூட்டாளிகள் சென்னை தியாகராய நகரை சேர்ந்த தொழில

புதுக்கோட்டை,

சேகர் ரெட்டியின் கூட்டாளிகளாக செயல்பட்ட புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

சேகர் ரெட்டி கூட்டாளிகள்

சென்னை தியாகராய நகரை சேர்ந்த தொழில் அதிபர் சேகர் ரெட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மணல் குவாரிகளை நடத்தி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து உள்ளார். கடந்த 8–ந் தேதி சேகர் ரெட்டியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ரூ.131 கோடி மற்றும் கிலோ கணக்கில் தங்க நகைகள், முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.34 கோடிக்கு புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் இருந்தன. இதைத்தொடர்ந்து சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளி சீனிவாசலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சேகர்ரெட்டிக்கு ரூபாய் நோட்டுகளை மாற்ற உறுதுணையாக இருந்ததாக அவரது கூட்டாளிகளான ஆடிட்டர் பிரேம்குமார், திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டையில் சோதனை

இதைத்தொடர்ந்து நேற்று ராமச்சந்திரனுக்கு சொந்தமான முத்துப்பட்டினத்தில் உள்ள அவரது வீடு மற்றும் புதுக்கோட்டையில் உள்ள அவரது அலுவலகம் ஆகிய இடங்களில் 8 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அலுவலகத்தில் சுமார் 3½ மணி நேரம் தொடர்ந்து சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

பணம், நகைகள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்து முழு தகவல் தெரியவில்லை. ராமச்சந்திரன் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சேகர் ரெட்டிக்கு சொந்தமான மணல் குவாரி ஒப்பந்த பணிகளை கவனித்து வந்ததாக தெரிகிறது.

ரத்தினம் வீட்டில் சோதனை

திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் உள்ள தொழில் அதிபர் ரத்தினத்தின் வீட்டுக்கு நேற்று காலை 6.30 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 4 பேர் வந்தனர். வீட்டில் இருந்த ரத்தினத்தின் மனைவி செல்வி, மகன் வெங்கடேசன் மற்றும் உறவினர்களிடம் அதிகாரிகள் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

வீட்டில் உள்ள அனைத்து அறைகள், அலமாரிகள், பீரோ ஆகியவற்றையும் சோதனை செய்தனர். அதேபோல் கணினி, மடிக்கணினி ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர். இந்த சோதனையின்போது சில ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.

10½ மணி நேரம் சோதனை

ரத்தினம் நடத்திவரும் செங்கல்சூளை, மணல் குவாரி, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட அனைத்து தொழில்களையும் கவனித்துவரும் அலுவலகத்துக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் சென்றனர். அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், கணினி ஆகியவற்றை சோதனை செய்தனர். காலை 11.30 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது. சோதனை முடிந்ததும் அதிகாரிகள் சில ஆவணங்களை பைகளில் எடுத்துச் சென்றனர்.

சேகர் ரெட்டிக்கு ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்ததற்கான சில ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. அந்த ஆவணங்களுடன், கணினி ஹார்டு டிஸ்க்கையும் அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, பதில் கூற மறுத்துவிட்டனர். ரத்தினம் வீடு, அலுவலகத்தில் மொத்தம் 10½ மணி நேரம் சோதனை நடந்தது.

வருமான வரி அதிகாரிகளின் இந்த சோதனை திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story