விபத்தில் மூளைச்சாவு அடைந்த ரெயில்வே ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்


விபத்தில் மூளைச்சாவு அடைந்த ரெயில்வே ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்
x
தினத்தந்தி 25 Dec 2016 4:00 AM IST (Updated: 25 Dec 2016 2:59 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் மூளைச்சாவு அடைந்த ரெயில்வே ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டது. ரெயில்வே ஊழியர் திருச்சி பொன்மலைப்பட்டி திருநகரை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மனைவி மாதம்மாள். இவர்களுடைய மகன் மணிமாறன்(வயது 23), ரெயில்வே ஊழியர். மேலும் ஆக்கி விளையா

திருச்சி,

விபத்தில் மூளைச்சாவு அடைந்த ரெயில்வே ஊழியரின் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டது.

ரெயில்வே ஊழியர்

திருச்சி பொன்மலைப்பட்டி திருநகரை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மனைவி மாதம்மாள். இவர்களுடைய மகன் மணிமாறன்(வயது 23), ரெயில்வே ஊழியர். மேலும் ஆக்கி விளையாட்டு வீரரான இவர், மாநில அளவில் பல்வேறு ஆக்கி போட்டிகளில் பங்கேற்று உள்ளார். மணிமாறன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் ஜெயில்கார்னர் வழியாக பொன்மலைப்பட்டியில் உள்ள வீட்டுக்கு சென்றார்.

அப்போது முன்னால் சென்ற ஒரு வாகனத்தின் மீது அவரது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு பொன்மலை ரெயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீர் மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் வழங்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக மணிமாறனை தில்லைநகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

உடல் உறுப்புகள் தானம்

அங்கு அறுவை சிகிச்சை மூலம் அவருடைய உடலில் இருந்து கல்லீரல், 2 சிறுநீரகம், 2 கண்கள் ஆகியவை அகற்றப்பட்டன. கல்லீரல் திருச்சியில் தனியார் மருத்துவமனைக்கும், சிறுநீரகம் ஒன்று மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. 2 கண்களும் திருச்சியில் உள்ள ஒரு கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த உடல் உறுப்பு தானம் மூலம் 5 பேர் வாழ்வு பெற்றனர்.

இது குறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், “மணிமாறன் சிறந்த ஆக்கி விளையாட்டு வீரர். அவருடைய இழப்பு எங்கள் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தினாலும், அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் இந்த உலகத்தில் அவர் எங்கேனும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்“ என்று உருக்கமாக கூறினர்.


Next Story