போக்குவரத்து வசதி இல்லாததால் லாரியில் வந்து ரேஷன்பொருட்கள் வாங்கி செல்லும் கிராம மக்கள்
போக்குவரத்து வசதி இல்லாததால் கிராம மக்கள், லாரியில் வந்து ரேஷன் பொருட்களை வாங்கி செல்கின்றனர். ரேஷன் பொருட்கள் ராமநாதபுரம் அருகே உள்ளது புல்லங்குடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புல்லங்குடி, வெண்குளம், கோப்பேரிமடம், கூட்டாம்புளி ஆகிய கிர
ராமநாதபுரம்,
போக்குவரத்து வசதி இல்லாததால் கிராம மக்கள், லாரியில் வந்து ரேஷன் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
ரேஷன் பொருட்கள்ராமநாதபுரம் அருகே உள்ளது புல்லங்குடி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புல்லங்குடி, வெண்குளம், கோப்பேரிமடம், கூட்டாம்புளி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி மக்கள் புல்லங்குடியில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
வெண்குளம் கிராமத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலும், கோப்பேரிமடம் கிராமத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்திலும் புல்லங்குடி உள்ளது. இந்த கிராமங்களில் இருந்து புல்லங்குடிக்கு செல்ல போக்குவரத்து வசதி இல்லை. இதனால் வெண்குளம், கோப்பேரிமடம் பகுதிகளைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்து சென்று ரேஷன்பொருட்களை வாங்கி வந்தனர். இதனால் இந்த 2 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் ரேஷன்பொருட்கள் வாங்குவதற்கு மிகுந்த அவதிப்பட்டு வந்தனர்.
வாகன ஏற்பாடுஇந்த அவதியை போக்கும் வகையில் கடந்த 2006–2011–ம் ஆண்டு வரை ஊராட்சி தலைவராக இருந்த முனீசுவரன் என்பவர் தனக்கு சொந்தமான டிராக்டரில் கோப்பேரிமடம், வெண்குளம் கிராமங்களை சேர்ந்தவர்களை ரேஷன்கடைக்கு அழைத்து வரவும், ரேஷன்பொருட்களை வாங்கிய பின்பு அவர்களை ஊருக்கு அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்தார்.
அதன்பின்பு 2011–ம் ஆண்டு ஊராட்சி தலைவராக பொறுப்பேற்ற முனியசாமி என்பவர் தற்போது வரை தனக்கு சொந்தமான லாரி மூலம் கிராம மக்களை ரேஷன் கடைக்கு அழைத்து சென்று வருகிறார்.
உறுதி அளித்தனர்இதுகுறித்து கோப்பேரிமடம், வெண்குளம் கிராமத்தை சேர்ந்த மக்கள் கூறியதாவது:–
எங்கள் கிராமங்களைச் சேர்ந்த மக்களை ரேசன்கடைக்கு அழைத்து செல்ல வாகன வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பது ஊராட்சி தேர்தலின் போது முக்கிய கோரிக்கையாக இருந்தது. தேர்தலில் போட்டியிட்டவர்கள் அந்த கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தனர்.
கடந்த 2006–ம் ஆண்டு நடந்த ஊராட்சி தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர் முனீசுவரன், தேர்தலின் போது அளித்த வாக்குறுதிப்படி கோப்பேரிமடம், வெண்குளம் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களை ரேஷன்கடைக்கு மாதம்தோறும் தனக்கு சொந்தமான டிராக்டரில் அழைத்து சென்றார். அதன்பின்பு 2011–ம் ஆண்டு வெற்றி பெற்ற முனியசாமி லாரி மூலம் கிராம மக்களை தற்போது வரை அழைத்து சென்று வருகிறார்.
தகவல் தெரிவித்து விடுவார்ரேஷன்கடையில் பொருட்கள் வினியோகம் செய்யப்படும் நாள் குறித்து ரேஷன் கடை பணியாளர் ஒவ்வொரு மாதமும் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்து விடுவார். அதன்படி அன்றைய தினம் ஊராட்சி தலைவராக இருந்த முனியசாமியின் லாரி ஊரின் பொதுவான இடத்தில் நிறுத்தப்படும்.
அதில், கிராம மக்கள் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வருகிறோம். முதலில் கிராம மக்களை டிராக்டரில் ஏற்றி சென்றார்கள். தற்போது லாரியில் செல்கிறோம். வெண்குளத்தில் 100–க்கும் மேற்பட்ட ரேஷன்கார்டுகளும், கோப்பேரிமடத்தில் 40–க்கும் மேற்பட்ட ரேஷன்கார்டுகளும் உள்ளன.
எனவே, மாதத்தில் ஒருநாள் புல்லங்குடியில் இருந்து வந்து எங்கள் கிராமங்களுக்கு ரேஷன்பொருட்கள் வினியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.