இளம்பிள்ளை அருகே வன்முறையில் போலீஸ் அதிகாரிகளின் ‘வாக்கி டாக்கி’ மாயம் வீடு, வீடாக சென்று சோதனை


இளம்பிள்ளை அருகே வன்முறையில் போலீஸ் அதிகாரிகளின் ‘வாக்கி டாக்கி’ மாயம் வீடு, வீடாக சென்று சோதனை
x
தினத்தந்தி 26 Dec 2016 4:00 AM IST (Updated: 25 Dec 2016 8:41 PM IST)
t-max-icont-min-icon

இளம்பிள்ளை அருகே விபத்தில் வாலிபர் இறந்தபோது ஏற்பட்ட வன்முறையில் போலீஸ் அதிகாரிகளின் ‘வாக்கி டாக்கி‘கள் மாயமானது. அவற்றை கண்டுபிடிக்க போலீசார் வீடு, வீடாக சோதனை நடத்தி வருகின்றனர். வாலிபர் சாவு சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள கோனேரிபட்டி பூசாரி கா

இளம்பிள்ளை,

இளம்பிள்ளை அருகே விபத்தில் வாலிபர் இறந்தபோது ஏற்பட்ட வன்முறையில் போலீஸ் அதிகாரிகளின் ‘வாக்கி டாக்கி‘கள் மாயமானது. அவற்றை கண்டுபிடிக்க போலீசார் வீடு, வீடாக சோதனை நடத்தி வருகின்றனர்.

வாலிபர் சாவு

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள கோனேரிபட்டி பூசாரி காட்டுவளவை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 24). இவர் கடந்த 17–ந்தேதி கூட்டாத்து புளியமரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்கு போலீசார் வாகன சோதனை நடத்தினர். இதை பார்த்து திரும்பிச்செல்ல முயன்ற அவர் லாரி மோதி உயிரிழந்தார். இதன் காரணமாக போலீசாரின் வாகனம் தீ வைக்கப்பட்டு வன்முறை ஏற்பட்டது.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமையில் 1,000–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக வந்தனர். போலீசார் கூட்டத்தை கண்ணீர் புகைகுண்டு வீசி கலைத்தனர். இந்த சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 108 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

‘வாக்கி டாக்கி‘ மாயம்

இந்த நிலையில் வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்–இன்ஸ்பெக்டர் ஆகியோரின் ‘வாக்கி டாக்கி‘கள் மற்றும் ஒரு போலீஸ்காரரின் தொப்பியும் மாயமானது. இதனால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ‘வாக்கி டாக்கி‘கள், தொப்பி காணாமல் போனது குறித்து வெளியில் யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டனர்.

தற்போது ‘வாக்கி டாக்கி‘ மற்றும் தொப்பியை வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தூக்கி சென்று விட்டதாக கூறி தப்பக்குட்டை, கரிக்கடை, கோனேரிபட்டி மற்றும் இளம்பிள்ளை சுற்றுவட்டார பகுதிகளில் வீடு, வீடாக சென்று போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனிடையே, 2 ‘வாக்கி டாக்கி’கள் மாயமானது குறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மன உளைச்சல்

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதியில் தற்போது தான் போலீசார் வருகை குறைந்து இயல்புநிலை திரும்பி கொண்டு இருக்கிறது. அதற்குள் போலீஸ் அதிகாரிகளின் ‘வாக்கி டாக்கி‘ மற்றும் தொப்பியை காணவில்லை என கூறி வீடு, வீடாக சென்று சோதனை நடத்துகிறார்கள். இது எங்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எனவே, நாங்கள் எந்தவித இடையூறும் இன்றி நிம்மதியாக வாழ மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றனர்.


Next Story