பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு பயணிகள் கடும் அவதி
பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த பல மணி நேரம் காத்திருக்கும் வாகனங்களால் குறித்த நேரத்தில் இலக்கை அடைய முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். சுங்கச்சாவடி சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிகொண்டா அருகே உபயோகிப்பாளர் கட்டண வசூல்
அணைக்கட்டு,
பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த பல மணி நேரம் காத்திருக்கும் வாகனங்களால் குறித்த நேரத்தில் இலக்கை அடைய முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
சுங்கச்சாவடிசென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிகொண்டா அருகே உபயோகிப்பாளர் கட்டண வசூல் மையம் (டோல் பிளாசா) எனப்படும் சுங்க சாவடி உள்ளது. இந்த பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பணிகளை மேற்கொள்ள உரிமை பெற்ற நிறுவனத்தினர் இந்த வழியாக செல்லும் பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்து வருகின்றனர். இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
மத்திய அரசு ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்த பிறகு 20 நாட்களுக்கு மேலாக அனைத்து வாகனங்களும் இலவசமாக சென்று வந்தன.
காத்திருக்கும் வாகனங்கள்அதன்பின் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களில் மட்டும் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் நீண்ட வரிசையில் கட்டணம் செலுத்த காத்து நிற்கின்றன. ஏராளமானோர் புதிய நோட்டுகள் இல்லாததால் மின்னணு பண பரிவர்த்தனை திட்டத்தில் ‘ஸ்வைப்பிங்’ முறையில் பணம் செலுத்துகின்றனர். ஆனால் அவர்கள் செலுத்தும் கார்டுகளுக்கு பணம் கிடைப்பது உறுதியாவதற்கு குறைந்தது 2 நிமிடத்திற்கு மேலாகிறது. இதனால் பின்னால் வரும் வாகனங்கள் உடனடியாக செல்ல முடியாமல் வரிசையில் நிற்க வேண்டி உள்ளது.
இந்த நிலையில் நேற்றும் வாகனங்கள் கட்டணம் செலுத்த அணிவகுத்து நின்றன. அரசு பஸ்சில் பயணம் செய்த பொதுமக்கள் வெகுநேரம் பஸ்சில் காத்திருந்ததால் அவதிப்பட்ட நிலையில் ஆத்திரமடைந்து கட்டணம் வசூலிப்பவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பயணி ஒருவர் கூறியதாவது:–
ஒரு மணி நேரம் தாமதம்நான் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். தினமும் நான் திருப்பத்தூரில் இருந்து வேலூர் வரை சென்று அங்கிருந்து நிறுவனத்தின் பஸ்சில் ஸ்ரீபெரும்புதூர் செல்வேன். நேற்று முன்தினம் சுமார் ஒரு மணி நேரம் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த அரசு பஸ் காத்திருந்தது. இதனால் நான் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலூர் செல்ல முடியாததால் நிறுவனத்தின் பஸ்சை தவறவிட்டேன்.
சுங்கச்சாவடியில் இருபக்கமும் 10 கவுன்ட்டர்கள் அமைத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் அனைத்து வழிகளிலும் அனைத்து வாகனங்களும் கலந்து செல்கின்றன.
அதாவது லாரிகள், கார், பஸ் போன்றவை அனைத்து வழிகளிலும் செல்வதால் கட்டணம் வசூலிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. ஆகவே அவசரமாக செல்லும் பஸ் மற்றும் கார் போன்ற வாகனங்களுக்கு என்று தனியாக வழிச்சாலை அமைத்து தந்தால் குறித்த நேரத்தில் பயணிகள் தாமதமின்றி செல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
‘ஸ்வைப் மிஷின்’இதுகுறித்து சுங்கச்சாவடி மேலாளர் கூறுகையில், ‘தற்போது வாகனங்களில் கட்டணம் வசூலிக்கும் முறை மாற்றப்பட்டுள்ளது. ‘ஸ்வைப் மிஷின்’ மூலம் பணம் பெற்று வருகிறோம். வாகன ஓட்டிகள் தரும் கார்டுகளால் சில நேரங்களில் பணம் எடுக்க காலதாமதம் ஏற்படுகிறது. அதனால்தான் சுங்கச்சாவடியில் அதிக நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் பயணிகள் வாகனங்கள் செல்வது தாமதமாவதை தவிர்க்க பஸ், கார்களுக்கு என தனி வழியில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.