கடையம் அருகே மேலும் ஒரு சிறுத்தைப்புலி சிக்கியது வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்


கடையம் அருகே மேலும் ஒரு சிறுத்தைப்புலி சிக்கியது வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்
x
தினத்தந்தி 26 Dec 2016 4:30 AM IST (Updated: 25 Dec 2016 10:02 PM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே மேலும் ஒரு சிறுத்தைப்புலி சிக்கியது. வனத்துறையினர் கூண்டு வைத்து அந்த சிறுத்தைப்புலியை பிடித்தனர். தொடர் அட்டகாசம் நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சிக்கு மேற்கே கடனா நதி அணை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியான இப்பகுதியில் உள்ள கோவிந்

கடையம்,

கடையம் அருகே மேலும் ஒரு சிறுத்தைப்புலி சிக்கியது. வனத்துறையினர் கூண்டு வைத்து அந்த சிறுத்தைப்புலியை பிடித்தனர்.

தொடர் அட்டகாசம்

நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சிக்கு மேற்கே கடனா நதி அணை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியான இப்பகுதியில் உள்ள கோவிந்தப்பேரி, சம்மங்குளம், அழகப்பபுரம், பெத்தான்பிள்ளை குடியிருப்பு ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள விவசாய தோட்டங்களுக்குள் அடிக்கடி வன விலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

தோட்டங்களில் காவலுக்கு கட்டியிருக்கும் நாய்களையும், சிறுத்தைப்புலி அடித்துக் கொன்று தூக்கிச் சென்று விடுகின்றன. மேலும் ஊருக்குள் புகுந்து ஆடு மற்றும் நாய்களையும் சிறுத்தைப்புலி அடித்து கொன்று விட்டு தலைமறைவானது.

3 சிறுத்தைப்புலிகள் சிக்கின

கடந்த ஆகஸ்டு மாதம் அழகப்பபுரம் பகுதியில் வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தைப்புலியை பிடித்தனர். அதன் பிறகு கடந்த நவம்பர் மாதம் 2–ந் தேதி கோவிந்தபேரியில் சிறுத்தைப்புலி ஒன்று சிக்கியது. அதன் பின்னரும் சுற்று வட்டார பகுதிகளில் சிறுத்தைப்புலியின் அட்டகாசம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

இதனால் இப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் பீதி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் கடந்த 12–ந் தேதியன்று கூண்டில் நாயை கட்டி வைத்து 3 வயதுடைய சிறுத்தைப்புலியை வனத்துறையினர் பிடித்து சென்று வனப்பகுதிக்குள் விட்டனர்.

மேலும் ஒரு சிறுத்தைப்புலி

இதையடுத்து பொதுமக்களும், விவசாயிகளும் நிம்மதி பெருமூச்சுவிட்ட நிலையில் மீண்டும் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வனத்துறையினர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மீண்டும் பெத்தான்குடியிருப்பு பகுதியில் ஏற்கனவே வைத்த அதே இடத்தில் கூண்டு வைத்தனர். அந்த கூண்டுக்குள் நாய் ஒன்றும் கட்டி வைக்கப்பட்டிருந்தது. சிறுத்தைப்புலியை பிடிப்பதற்காக வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு இருந்தனர். விவசாயிகளும், பொதுமக்களும் அவர்களுக்கு உதவியாக இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வனத்துறையினர் கூண்டு வைத்திருந்த பகுதிக்கு சென்று பார்த்தனர். அங்கு கூண்டுக்குள் சிறுத்தைப்புலி சிக்கியது தெரிய வந்தது. தகவல் அறிந்ததும் சுற்று வட்டார பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் திரண்டு வந்து சிறுத்தைப்புலியை பார்த்தனர். பிடிபட்ட அந்த சிறுத்தைப்புலியானது கூண்டுக்குள் ஒரு இடத்தில் நிற்காமல் அங்குமிங்கும் அலைந்தபடி மிகவும் ஆக்ரோஷமாக உறுமிக்கொண்டே இருந்தது.

வனப்பகுதிக்குள் விட்டனர்

இதுதொடர்பாக களக்காடு–முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஜெயராஜூக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவுப்படி, வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர்.

சிறுத்தைப்புலியை பிடிக்கும் பணிக்காக ஜே.சி.பி. எந்திரமும், டிராக்டரும் வரவழைக்கப்பட்டது. ஜே.சி.பி. உதவியுடன் அந்த கூண்டு அப்படியே தூக்கப்பட்டு டிராக்டரில் நிறுத்தப்பட்டது. பின்னர் வனத்துறையினர் அந்த சிறுத்தைப்புலியை முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியான கன்னிக்கட்டி என்று அழைக்கப்படும் வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விட்டனர்.


Next Story