மொட்டை அடிக்கும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு உரிமம் வழங்கும் விவகாரம்: பழனி முருகன் கோவில் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் ஐகோர்ட்டில் வழக்கு
மொட்டை அடிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு உரிமம் வழங்கும் விவகாரம் தொடர்பாக பழனி முருகன் கோவில் அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஐகோர்ட்டில் மனு திண்டுக்கல் மாவட்டம் பழனி காமராஜ்நகரைச் சேர
மதுரை,
மொட்டை அடிக்கும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு உரிமம் வழங்கும் விவகாரம் தொடர்பாக பழனி முருகன் கோவில் அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஐகோர்ட்டில் மனுதிண்டுக்கல் மாவட்டம் பழனி காமராஜ்நகரைச் சேர்ந்தவர் குப்புராஜ். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
பழனி முருகன் கோவிலுக்கு வருபவர்களில் பலர் மொட்டை போட்டுக்கொள்வது வழக்கம். பழனி கோவிலில் பக்தர்களுக்கு மொட்டை அடிக்கும் பணியில் 310 பேர் ஈடுபட்டுள்ளனர். நானும், அந்த பணியில் ஈடுபட்டுள்ளேன். இந்த பணியை மேற்கொள்ள எங்களுக்கு கோவில் நிர்வாகம் உரிமம் வழங்குகிறது. 60 வயது முடிவடைந்ததும் இந்த உரிமம் தானாக ரத்தாகி விடும்.
அதுபோன்ற சூழ்நிலையில் அந்த தொழிலாளியின் வாரிசுக்கு உரிமம் வழங்கப்படும் என்ற விதியை இந்து அறநிலையத்துறை ஆணையர் கொண்டுவந்தார். 60 வயது முடிவடைந்ததும் உரிமம் தானாக ரத்தாகி விடும் என்ற விதியை தளர்த்தி 60 வயதுக்கும் மேல் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று 1989–ம் ஆண்டு கோவில் நிர்வாகத்திடம் முறையிட்டோம்.
ரத்து செய்ய வேண்டும்அப்போது கோவில் நிர்வாகம், 60 வயதுக்கு மேல் நரம்பு தளர்ச்சி போன்ற பாதிப்பு இருக்கும் என்பதால் மொட்டை போட்டுக்கொள்ளும் பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி அந்த கோரிக்கையை ஏற்க கோவில் நிர்வாகம் மறுத்துவிட்டது.
இந்தநிலையில் பக்தர்கள் கூட்ட நெரிசல் காரணமாக 60 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தற்காலிகமாக உரிமத்தை புதுப்பித்து வழங்க முடிவு செய்துள்ளதாக கூறி கோவில் இணை ஆணையர் 4 பேருக்கு 3.12.2016 அன்று தற்காலிகமாக உரிமத்தை புதுப்பித்து வழங்கி உள்ளார்.
60 வயதுக்கு மேல் உரிமம் வழங்கப்படாது என்று இந்து அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவை மீறி கோவில் இணை ஆணையர் தற்காலிகமாக உரிமத்தை புதுப்பித்து வழங்கி இருப்பது நியாயமற்றது. எனவே, 60 வயதுக்கு மேல் உள்ள 4 பேருக்கு தற்காலிகமாக உரிமத்தை புதுப்பித்து வழங்கிய கோவில் இணை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
நோட்டீஸ்இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் டி.லெனின்குமார் ஆஜராகி வாதாடினார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு சம்பந்தமாக இந்து அறநிலையத்துறை ஆணையர், கோவில் இணை ஆணையர் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.