சேலத்தில் வழிப்பறியில் ஈடுபட்டதால் பொதுமக்கள் விரட்டினர்: பாலத்தில் இருந்து கீழே குதித்த கொள்ளையனின் கால் முறிந்தது கூட்டாளி கைது


சேலத்தில் வழிப்பறியில் ஈடுபட்டதால் பொதுமக்கள் விரட்டினர்: பாலத்தில் இருந்து கீழே குதித்த கொள்ளையனின் கால் முறிந்தது கூட்டாளி கைது
x
தினத்தந்தி 26 Dec 2016 4:30 AM IST (Updated: 25 Dec 2016 11:22 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்டபோது பொதுமக்கள் விரட்டியதால் தப்பிய ஓடிய கொள்ளையன் பாலத்தில் இருந்து கீழே குதித்தான். இதில் அவனது கால் முறிந்தது. அவனது கூட்டாளியை போலீசார் கைது செய்தனர். வாலிபரிடம் வழிப்பறி சேலம் அம்மாபேட்டை வாசக சாலை பகுதியை

சேலம்,

சேலத்தில் வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்டபோது பொதுமக்கள் விரட்டியதால் தப்பிய ஓடிய கொள்ளையன் பாலத்தில் இருந்து கீழே குதித்தான். இதில் அவனது கால் முறிந்தது. அவனது கூட்டாளியை போலீசார் கைது செய்தனர்.

வாலிபரிடம் வழிப்பறி

சேலம் அம்மாபேட்டை வாசக சாலை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 28). இவர், அப்பகுதியில் உள்ள டி.வி. கடை ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் கடையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

தில்லைநகர் பாலம் அருகே சென்றபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென ரமேசை வழிமறித்தனர். பின்னர் அவர்கள், கத்தியை காட்டி மிரட்டி ரமேஷ் அணிந்திருந்த 1½ பவுன் தங்கச்சங்கிலி மற்றும் தங்க மோதிரம், செல்போன், பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி செல்ல முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ், ‘திருடன், திருடன்‘ என சத்தம் போட்டு கூச்சலிட்டார்.

கால் முறிந்தது

சத்தம் கேட்டு அந்த பகுதி பொதுமக்கள் அங்கு வந்து 3 கொள்ளையர்களையும் பிடிக்க முயன்றனர். இதனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு ஓடினார்கள். இதில் 2 பேர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இன்னொரு கொள்ளையனை பொதுமக்கள் விரட்டினார்கள். அவன் தில்லைநகர் பாலத்தில் ஏறி கீழே குதித்தான். இதில் அவனது வலது கால் முறிந்தது.

அவனை பிடித்த பொதுமக்கள் இதுபற்றி அம்மாபேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்–இன்ஸ்பெக்டர்கள் அங்கப்பன், சத்தியமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், கால் முறிவு ஏற்பட்ட கொள்ளையனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், கால் முறிவு ஏற்பட்ட கொள்ளையனின் பெயர் மாரியப்பன் என்கிற மாரிமுத்து (21) என்பதும், சேலம் ஜான்சன்பேட்டை ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது. மேலும், அவனுடன் வழிப்பறியில் ஈடுபட்டு தப்பி ஓடிய கூட்டாளிகள் கிச்சிபாளையத்தை சேர்ந்த பைரோஸ் (21), பல்மணி என்பதும் தெரியவந்தது.

கூட்டாளி கைது

மாரிமுத்து மீது ஏற்கனவே வீராணம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதாக ஒரு வழக்கும், கடந்த 23–ந் தேதி இரவு பணி முடித்து வீட்டிற்கு சென்ற தனியார் நிறுவன ஊழியரிடம் பணம், செல்போன் பறித்ததாக அம்மாபேட்டை போலீசில் ஒரு வழக்கும் உள்ளது. இந்தநிலையில், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாரிமுத்துவிடம் அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கொடுத்த தகவலின்பேரில் மாரிமுத்துவின் கூட்டாளியான பைரோசை கிச்சிபாளையம் பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பல்மணியை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட பைரோஸ் மீது வேறு ஏதாவது வழக்குகள் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story