மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது: மாடு தாண்டும் ஆறாக மாறிய காவிரி


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது: மாடு தாண்டும் ஆறாக மாறிய காவிரி
x
தினத்தந்தி 26 Dec 2016 4:30 AM IST (Updated: 25 Dec 2016 11:23 PM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் குறைந்த அளவே செல்வதால் மாடு தாண்டும் ஆறாக காவிரி ஆறு மாறிவிட்டது. காவிரி ஆறு கர்நாடக மாநிலம் குடகுமலையில் உள்ள கூர்க்கில் உற்பத்தியாகும் காவிரி ஆறு சிறிய ஓடைபோல் தோன்றி பிறகு பெரு

மேட்டூர்,

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் குறைந்த அளவே செல்வதால் மாடு தாண்டும் ஆறாக காவிரி ஆறு மாறிவிட்டது.

காவிரி ஆறு

கர்நாடக மாநிலம் குடகுமலையில் உள்ள கூர்க்கில் உற்பத்தியாகும் காவிரி ஆறு சிறிய ஓடைபோல் தோன்றி பிறகு பெருக்கெடுத்து அகன்ற காவிரியாக உருமாறுகிறது. இதனால் ‘ஆடு தாண்டும் அழகு காவிரி‘ என்று அங்கு அழைப்பார்கள்.

இவ்வாறு பெருக்கெடுத்து ஓடிவரும் காவிரியை தமிழகத்தில் தடுத்து நிறுத்த மேட்டூர் அணை 1934–ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனத்தேவைக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை தண்ணீர் திறந்து விடப்படும். இந்த காலங்களில் மேட்டூர் காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுக்கொண்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இது பார்ப்பதற்கு பிரமாண்டமாய் காட்சியளிக்கும்.

கைகொடுக்காத பருவமழை

கடந்த பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் பருவமழை குறித்த நேரத்தில் கை கொடுக்கவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு போதுமான நீர்வரத்து இல்லாமல் போனது. இதன் காரணமாக குறித்த நேரத்தில் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாமல் காலதாமதமாக திறந்து விடப்படுகிறது.

அணை முழு கொள்ளளவை எட்டாமல் நீர் இருப்பு குறைவாக இருந்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டு உள்ளது. அதாவது, கடந்த நவம்பர் மாதம் முதல் வினாடிக்கு 750 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

‘மாடு தாண்டும் காவிரி‘

இதனால் அகன்ற மேட்டூர் காவிரி ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் செல்கிறது. நேற்று அந்த பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் கரையில் இருந்து சர்வசாதாரணமாக காவிரி ஆற்றை கடந்து மறுகரைக்கு சென்றன. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள ‘ஆடு தாண்டும் காவிரி‘ போல் மேட்டூரில் ‘மாடு தாண்டும் ஆறான காவிரி‘ என்று மாறி விட்டது.

நீர்வரத்து குறைந்தது

இதற்கிடையே, மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு நேற்று குறைந்தது. அதாவது, நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 310 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த தண்ணீர், நேற்று வினாடிக்கு 160 கனஅடியாக குறைந்தது. நீர்வரத்தைவிட அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது. நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37.86 அடியாக இருந்தது.


Next Story