பவானிசாகர் அருகே சிறுத்தைப்புலி மீண்டும் ஊருக்குள் புகுந்தது பொதுமக்கள் பீதி


பவானிசாகர் அருகே சிறுத்தைப்புலி மீண்டும் ஊருக்குள் புகுந்தது பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 26 Dec 2016 3:00 AM IST (Updated: 26 Dec 2016 12:11 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அருகே சிறுத்தைப்புலி மீண்டும் ஊருக்குள் புகுந்ததால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர். 3 ஆடுகளை... ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனப்பகுதியையொட்டி போக்கனாக்கரை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சிங்காரி, ஆறுமுகம்

பவானிசாகர்,

பவானிசாகர் அருகே சிறுத்தைப்புலி மீண்டும் ஊருக்குள் புகுந்ததால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர்.

3 ஆடுகளை...

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனப்பகுதியையொட்டி போக்கனாக்கரை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த சிங்காரி, ஆறுமுகம், அமராவதி கவுண்டர் ஆகியோருடைய 3 ஆடுகளை சிறுத்தைப்புலி கடித்து கொன்றது. இதைதொடர்ந்து சிறுத்தைப்புலியை பிடிக்க வனத்துறையினருக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க போக்கனாக்கரை கிராமத்தில் மொத்தம் 7 இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. மேலும் சிறுத்தைப்புலியை பிடிக்க அந்த கிராமத்தில் கூண்டு வைக்கப்பட்டு அதில் ஒரு ஆட்டையும் வனத்துறையினர் கட்டி வைத்தனர். அதுமட்டுமின்றி சிறுத்தைப்புலியை பிடிக்க பவானிசாகர் வனச்சரகர் பெர்னாட், சத்தியமங்கலம் வனப்பாதுகாப்பு படை வனச்சரகர் பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் 15–க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் போக்கனாக்கரை கிராமத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நள்ளிரவில் புகுந்த சிறுத்தைப்புலி

இந்தநிலையில் போக்கனாக்கரைக்கு அருகில் உள்ள துண்டன்சாலை கிராமத்தில் நேற்று முன்தினம் சிறுத்தைப்புலி புகுந்த சம்பவம் நடந்து உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:–

துண்டன்சாலை கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 50). விவசாயி. இவர் தன்னுடைய வீட்டில் 12 ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய ஆடுகளை வீட்டின் முன்பு கட்டிவிட்டு வீட்டின் உள்ளே குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார்.

இந்தநிலையில் சிறுத்தைப்புலி ஒன்று துண்டன்சாலை கிராமத்துக்குள் நள்ளிரவில் புகுந்தது. அந்த சிறுத்தைப்புலி முருகனின் வீட்டின் அருகே பதுங்கி சென்றது. சிறுத்தைப்புலியை பார்த்ததும் வீட்டின் முன்பு கட்டப்பட்டிருந்த ஆடுகள் கத்தின. இதனால் தூங்கி கொண்டிருந்த முருகன் திடுக்கிட்டு எழுந்தார்.

பொதுமக்கள் பீதி

உடனே அவர் கதவை திறந்து கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது அங்கு இருட்டில் சிறுத்தைப்புலி ஒன்று பதுங்கி இருந்ததை கண்டதும் அதிர்ச்சி அடைந்து ‘சிறுத்தைப்புலி, சிறுத்தைப்புலி’ என சத்தம் போட்டார்.

அவருடைய சத்தத்தை கேட்டதும் சிறுத்தைப்புலி அங்கிருந்து தப்பி ஓடியது. மேலும் அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு கூடிவிட்டனர். உடனே அவர்கள் இதுகுறித்து போக்கனாக்கரையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் துண்டன்சாலை கிராமத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் முருகன் வீட்டின் முன்பு பதிவாகி இருந்த கால் தடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பதிவாகி இருந்தது சிறுத்தைப்புலியின் கால் தடம் தான் என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர். துண்டன்சாலை கிராமம் போக்கனாக்கரை கிராமத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. போக்கனாக்கரை கிராமம் அருகே மீண்டும் சிறுத்தைப்புலி புகுந்த சம்பவத்தால் போக்கனாக்கரை, துண்டன்சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர்.


Next Story