செஞ்சேரிமலை அருகே 17–ம் நூற்றாண்டை சேர்ந்த ‘புலிக்குத்திக்கல்’ கண்டெடுப்பு
செஞ்சேரிமலை அருகே 17–ம் நூற்றாண்டை சேர்ந்த ‘புலிக்குத்திக்கல்’ கண்டெடுக்கப்பட்டுள்ளது. ‘புலிக்குத்திக்கல்’ திருப்பூரில் உள்ள வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த வெள்ளியங்கிரி, பொன்னுச்சாமி, செந்தில்குமார், ரஞ்சித் மற்றும் எ
திருப்பூர்,
செஞ்சேரிமலை அருகே 17–ம் நூற்றாண்டை சேர்ந்த ‘புலிக்குத்திக்கல்’ கண்டெடுக்கப்பட்டுள்ளது.
‘புலிக்குத்திக்கல்’திருப்பூரில் உள்ள வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த வெள்ளியங்கிரி, பொன்னுச்சாமி, செந்தில்குமார், ரஞ்சித் மற்றும் என்ஜினீயர் ரவிக்குமார் ஆகியோர் திருப்பூர் மாவட்டம் காமநாயக்கன்பாளையத்தை அடுத்த செஞ்சேரிமலை அருகில் உள்ள எஸ்.குமாரபாளையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு தமிழ் எழுத்துகளுடன் கூடிய ‘புலிக்குத்திக்கல்’ ஒன்றை கண்டெடுத்துள்ளனர்.
இதுகுறித்து என்ஜினீயர் ரவிக்குமார் கூறியதாவது:–
பண்டைய காலத்தில் பிற செல்வங்களை விட கால்நடை செல்வமே பெரும் செல்வமாக கருதப்பட்டது. மக்கள் வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டனர். அவர்கள் மாடு, எருமை, ஆடு, கோழி ஆகியவற்றை வளர்த்தனர். கால்நடைகளை பண்டமாற்றுப்பொருளாக பயன்படுத்தி தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொண்டனர். கால்நடைகள் இனப்பெருக்கம் காரணமாக அழியாமல் இருக்கக்கூடிய சொத்தாகும்.
வீரனின் நினைவாக...இவ்வாறாக வளர்க்கப்படும் மாடு மற்றும் எருமைகளை தொழுவத்திலும், ஆடுகளை பட்டியிலும் பாதுகாத்தனர். தனி மனிதனுடைய சொத்தாக மட்டுமே அல்லாமல் அவை நாட்டுக்குரிய பொது சொத்தாகவும் பாதுகாக்கப்பட்டன. கிராம தலைவர்கள், தங்கள் கிராமத்துக்குரிய கால்நடைகளை பாதுகாக்கும் கடைமையை மேற்கொண்டனர் என்பதை சிந்தாமணி காப்பியம் காட்டுகிறது.
கால்நடைகளை கொன்று தனக்கு உணவாக உட்கொள்ள வரும் புலிகளுடன் சண்டையிட்டு, வீரமரணம் அடைந்த வீரனின் நினைவாக, வீரத்தின் அடையாளமாக நடப்பட்ட கற்கள் ‘புலிக்குத்திக்கல்’ என்று அழைக்கப்படுகின்றன.
அணிகலன்கள்இங்கு கிடைத்துள்ள நடுகல் 110 சென்டிமீட்டர் உயரமும், 75 சென்டிமீட்டர் அகலமும் கொண்டது. இந்த கல்லின் கீழ்பகுதியில் தமிழில் மூன்று வரிகளை கொண்ட செய்தி உள்ளது. அதில் புலிகுத்தி பொடாறப்பகவுண்டன் என்று உள்ளது. அதாவது பொடாறப்ப கவுண்டர் என்பவர் புலியை குத்தி வீரமரணம் அடைந்த செய்தியை இது தெரிவிக்கிறது.
இந்த நடுகல்லில் வீரனின் தலை நேராக உள்ளது. வீரன் வலது கையில் உள்ள வாளால் புலியின் வயிற்றுப்பகுதியை குத்தும் நிலையிலும், இடது கையை மடக்கி பாயும் புலியை தடுக்கும் நிலையிலும் அமைந்துள்ளது. வீரன் கை மற்றும் கால் பகுதிகளில் வீர காப்பும், மார்பு பகுதியில் அணிகலன்களும், இடையில் நல்ல வேலைபாடுடன் கூடிய ஆடையும் அணிந்துள்ளார்.
17–ம் நூற்றாண்டுபுலியின் முன்னங்கால் இரண்டும் எழுந்த நிலையில் வீரனை தாக்கும் வகையிலும், பின்னங்கால் இரண்டும் நிலத்தில் உள்ளபடியும் அமைத்துள்ளனர். எழுத்து அமைப்பை வைத்து பார்க்கும் போது இந்த நடுகல் கி.பி. 17–ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும்.
இந்த நடுகல்லை பாதுகாக்கும் வகையில் அப்பகுதி மக்கள் கோவில் அமைத்துள்ளனர். இதனால் வரலாறு மற்றும் தொல்லியல் சின்னங்கள் அழிவிலிருந்து மீட்கப்படும். கிராம மக்களுக்கு நாங்கள் பாராட்டுக்களை தெரிவித்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.