குடிநீர் சீராக வழங்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் மாநகராட்சிக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவு
மதுரை மாநகராட்சி பகுதிகளில் சீராக குடிநீர் வினியோகிக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார். ஆய்வுக் கூட்டம் மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் சீராக வினியோகிப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி அண்ணா மாளிகையில்
மதுரை,
மதுரை மாநகராட்சி பகுதிகளில் சீராக குடிநீர் வினியோகிக்க போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் உத்தரவிட்டார்.
ஆய்வுக் கூட்டம்மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் சீராக வினியோகிப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி அண்ணா மாளிகையில் நடந்தது. கூட்டம் தொடங்கியவுடன், மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிற்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. துணை கமிஷனர் சாந்தி, நகர பொறியாளர் மதுரம், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, ஏ.கே.போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
தற்போது எதிர்பார்த்த அளவில் பருவமழை பெய்யவில்லை. வரும் காலங்களில் மழை எந்த அளவு பெய்யும் என்று கணக்கிடவும் முடியாது. எனவே மதுரை மாநகராட்சி மக்களுக்கு சுகாதாரம் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை எந்த இடையூறு இல்லாமல் செய்து தர வேண்டும்.
தற்போது வைகை அணையில் நீர்மட்டம் 24 அடியாக உள்ளது. அதே சமயம் கடந்த ஆண்டில், இதே நாளில் 46 அடியாக இருந்தது. பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது 111 அடியாக உள்ளது. கடந்த ஆண்டில் இதே நாளில் 118 அடியாக இருந்தது. இதனால் கடந்த ஆண்டில் மக்களுக்கு சீராக குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது உள்ள குடிநீர் பற்றாகுறையை சமாளிக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
மதுரை மாநகராட்சி 100 வார்டு பகுதிகளில் தற்போது 2 ஆயிரத்து 85 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. அதில் மேலும் 150 இடங்களில் போர்வெல்கள் போடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறை இருக்கும் இடங்களில் கூடுதலாக லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் மேயர் கு.திரவியம், நகரமைப்பு அலுவலர் ரங்கநாதன், உதவி நகர்நல அலுவலர் பார்த்திப்பன், உதவி ஆணையாளர்கள் கவுசலாம்பிகை, பழனிச்சாமி, செல்லப்பா நாராயணன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.