எலக்ட்ரீசியன் கொலை வழக்கு: கோர்ட்டில் சரணடைந்த டிரைவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை


எலக்ட்ரீசியன் கொலை வழக்கு: கோர்ட்டில் சரணடைந்த டிரைவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை
x
தினத்தந்தி 26 Dec 2016 10:42 PM IST (Updated: 26 Dec 2016 10:42 PM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி அருகே கீழநெடும்பூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராசாங்கம் மகன் நெப்போலியன்(வயது 23), எலக்ட்ரீசியன். சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் உள்ள மோட்டார் கொட்டகையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து குமராட்சி போலீசார

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி அருகே கீழநெடும்பூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராசாங்கம் மகன் நெப்போலியன்(வயது 23), எலக்ட்ரீசியன். சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் உள்ள மோட்டார் கொட்டகையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து குமராட்சி போலீசார் விசாரணை நடத்தியதில், நெப்போலியனை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் கழுத்தை இறுக்கி கொலை செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர். இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் சண்முகவடிவேல்(38), நெப்போலியனை கொலை செய்ததாக திண்டிவனம் கோர்ட்டில் சரணடைந்தார். இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சண்முகவடிவேலை, குமராட்சி போலீசார் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

நெப்போலியனுக்கும், எனது மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதை நான் பலமுறை கண்டித்தேன். இதையும் மீறி அவர் என் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்தார். இதனால் நான் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். அதன்படி சம்பவத்தன்று, நெப்போலியனிடம் பேச வேண்டும் என்று கூறி, அவரை மோட்டார் கொட்டகைக்கு வரவழைத்தேன். அப்போது எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் எனது கழுத்தில் போட்டிருந்த துண்டால் அவரை கழுத்தில் இறுக்கி கொலை செய்தேன். அவர் இறந்தது தெரியவந்தவுடன், அங்கிருந்து தப்பிச்சென்றேன். இந்த நிலையில் போலீசார் என்னை தேடுவதை அறிந்து திண்டிவனம் கோர்ட்டில் சரணடைந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஒருநாள் போலீஸ் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று(செவ்வாய்கிழமை) மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சண்முகவடிவேல் மீண்டும் சிறையில் அடைக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story