ஊராட்சிகளுக்கு மானிய நிதி வழங்கப்படவில்லை பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் கிராமமக்கள் கடும் அவதி
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 9 ஊராட்சிகளுக்கு மானிய நிதி வழங்காததால், அடிப்படை வசதிகள், பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. இதனால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மானிய நிதி தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சிக்கும், தெரு விளக்கு
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 9 ஊராட்சிகளுக்கு மானிய நிதி வழங்காததால், அடிப்படை வசதிகள், பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. இதனால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மானிய நிதிதமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சிக்கும், தெரு விளக்குகள், குடிநீர்குழாய்கள், கழிவுநீர் வாய்க்கால் பராமரிப்புக்காக ஒவ்வொரு மாதமும் மக்கள் தொகைக்கு ஏற்ப, மாநில நிதி குழு மூலம் மானிய நிதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் நடப்பு மாதத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குசவன்குண்டு, விராதனூர், சாமநத்தம் உள்பட 8 ஊராட்சிகளுக்கு மானிய நிதி முற்றிலும் வரவில்லை.
இதனால் இந்த ஊராட்சிகளில் அடிப்படை வசதிகள் நடைபெறாமல், தெருவிளக்கு கம்பங்களில் ஏற்பட்ட பழுதுகள் நீக்கப்படாமலும், உடைந்த குடிநீர் குழாய்களுக்கு பதிலாக, புதிய குழாய்கள் அமைக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. மின் பழுதால் ஒரு சில தெருக்கள் இருளில் மூழ்கி உள்ளன. குழாய்கள் சரிசெய்யப்படாததால், இந்த ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் குடிநீருக்காக கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நிதி பற்றாக்குறைஇதே ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட சூரக்குளம் ஊராட்சிக்கு கடந்த 4 மாதங்களாக மானிய நிதி வழங்கப்படாததால், தெரு விளக்குகள் பராமரிக்கப்படவில்லை. கிராமமக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் 4 மாதமாக கிராமம் இருளில் மூழ்கியும், குழாய்களில் குடிநீர் வராமலும் இருந்து வருகிறது. இந்தநிலையால் இந்த பகுதி மக்கள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர்.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, பொதுமக்கள் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களிலிருந்து தான் வரி வகைகளை செலுத்துவார்கள், ஆகவே தற்போது நிதி பற்றாக்குறை ஏற்பட்டு, பராமரிப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பயன் இல்லை என்றனர்.
அதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு போதுமான நிதி வழங்கி, பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த கிராமமக்கள் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.