திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு


திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு
x
தினத்தந்தி 27 Dec 2016 4:30 AM IST (Updated: 26 Dec 2016 11:35 PM IST)
t-max-icont-min-icon

வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். பட்டமளிப்பு விழா வேலூரை அடுத்த சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தி

சிப்காட் (ராணிப்பேட்டை)

வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

பட்டமளிப்பு விழா

வேலூரை அடுத்த சேர்க்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 12–வது பட்டமளிப்பு விழா நேற்றுகாலை பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான சி.எச்.வித்யாசாகர் ராவ் தலைமை தாங்கி முனைவர் பட்டம் பெற்றவர்கள், தேர்வில் முதலிடம் பிடித்தவர்கள் என மொத்தம் 157 பேருக்கு பட்டங்களையும், பரிசுகளையும் வழங்கினார்.

பல்கலைக்கழக துணைவேந்தர் கே.முருகன் வரவேற்புரையாற்றி, ஆண்டறிக்கை வாசித்தார். பல்கலைக்கழக இணை வேந்தரும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் சிறப்புரையாற்றினார்.

விழாவில் அவர் பேசியதாவது:–

67 புதிய கல்லூரிகள்

மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் புதிதாக 67 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 18 வயது முதல் 23 வயதுவரை உள்ளவர்கள் உயர்கல்வி பயில்வதற்கு ஒரு லட்சம்பேருக்கு 27 கல்லூரிகள் வீதம் உள்ளது. ஆனால் தமிழகத்தில் இந்த வயது உள்ள ஒரு லட்சம்பேருக்கு 37 கல்லூரிகள் வீதம் இருக்கிறது.

இந்தியாவில் உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை 23.6 சதவீதமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் உயர்கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை 44.8 சதவீதமாக உள்ளது. இந்திய அளவில் உயர்கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 22.7 சதவீதமாகும். ஆனால் தமிழகத்தில் உயர்கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 42.7 சதவீதமாக இருக்கிறது.

முன்னோடி மாநிலமாக

தரமான உயர்கல்வி வழங்குவதில் இந்தியாவில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. இதற்கெல்லாம் காரணம் மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா தான். மேலும் படித்தவர்களுக்கு ஆங்காங்கே பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அரசு கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் அதிக அளவில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாத திகழ்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் வானிலை மாறுதல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய பல்உயிரிகள் ஆணையத்தின் முதன்மையர் பி.மீனாக்குமாரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பட்டமளிப்பு உரைநிகழ்த்தினார்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் என்.ஜி.பார்த்திபன் (சோளிங்கர்), ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), கார்த்திகேயன் (வேலூர்), பல்கலைக்கழக டீன் பெருவழுதி மற்றும் பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், கல்லூரிகளின் தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள், முதல்வர்கள், பல்கலைக்கழக துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ– மாணவிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் பல்கலைக்கழக பதிவாளர் அசோகன் நன்றிகூறினார்.


Next Story