108 ஆம்புலன்சில் பிரசவத்துக்கு சென்ற போது விபத்து: பலியான கர்ப்பிணி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் கலெக்டரிடம், கணவர் கோரிக்கை
தஞ்சை மாவட்டம் மதுக்கூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது32). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று தஞ்சையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் அண்ணாதுரையிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– கடந்த 8–8–2015–ம் ஆண்டு நிற
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் மதுக்கூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது32). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று தஞ்சையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் அண்ணாதுரையிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
கடந்த 8–8–2015–ம் ஆண்டு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த எனது மனைவி ராதிகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவரை 108 ஆம்புலன்சு மூலம் பிரசவத்திற்காக தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தேன். தஞ்சையை அடுத்த மடிகை அருகே 108 ஆம்புலன்ஸ் வந்த போது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது 108 ஆம்புலன்ஸ் மோதியது. இதில் எனது மனைவி ராதிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் எனது மனைவி வயிற்றில் இருந்த இரட்டை குழந்தைகளும் இறந்தன.
இந்த விபத்தில் ஆம்புலன்சில் இருந்த நானும் படுகாயம் அடைந்தேன். விபத்துக்குப்பின்னர் என்னால் வேலைக்கு செல்ல முடியவில்லை. எனக்கு நிதிதா என்ற 5 வயது குழந்தை உள்ளார். என்னால் வேலைக்கு செல்ல முடியாததால் எனது குழந்தையை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். எனது மனைவி இறந்து 15 மாதங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. எனவே கலெக்டர் இதில் தலையிட்டு உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.