பவானி அருகே கத்தியால் குத்தி மாமனார் படுகொலை தடுக்க வந்த மைத்துனரையும் குத்திவிட்டு இறைச்சி கடைக்காரர் தப்பி ஓட்டம்


பவானி அருகே கத்தியால் குத்தி மாமனார் படுகொலை தடுக்க வந்த மைத்துனரையும் குத்திவிட்டு இறைச்சி கடைக்காரர் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 27 Dec 2016 3:30 AM IST (Updated: 27 Dec 2016 12:26 AM IST)
t-max-icont-min-icon

பவானி அருகே கத்தியால் குத்தி மாமனாரை படுகொலை செய்த இறைச்சி கடைக்காரர், தடுக்க வந்த மைத்துனரையும் குத்திவிட்டு தப்பி ஓடினார். இதுபற்றி கூறப்படுவதாவது:– இறைச்சி கடைக்காரர் ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள மூன்ரோடு குட்டைமுனியப்பன் கோவில் சேவண்டியூரை சேர்ந

பவானி,

பவானி அருகே கத்தியால் குத்தி மாமனாரை படுகொலை செய்த இறைச்சி கடைக்காரர், தடுக்க வந்த மைத்துனரையும் குத்திவிட்டு தப்பி ஓடினார்.

இதுபற்றி கூறப்படுவதாவது:–

இறைச்சி கடைக்காரர்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள மூன்ரோடு குட்டைமுனியப்பன் கோவில் சேவண்டியூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 55). கூலித்தொழிலாளி. இவருக்கு மூர்த்தி (39), சண்முகம் (28) ஆகிய 2 மகன்களும், ஜெயமணி (30) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் 3 பேரும் திருமணமாகி அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இதில் மூர்த்தி வக்கீலுக்கு பயிற்சி பெற்று வருகிறார்.

ஜெயமணி மாற்றுத்திறனாளி. அவருடைய கணவர் சுப்பிரமணி. இவருடைய முதல் மனைவி இறந்துவிட்டதால் 2–வதாக ஜெயமணியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3½ வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. சுப்பிரமணி அதே பகுதியில் இறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார். குடிப்பழக்கம் உண்டு. இந்தநிலையில் பழனிச்சாமி தனக்கு உடல்நிலை சரியில்லாததால் கடந்த 1 மாதத்துக்கு முன்பு, தான் வளர்த்து வரும் பசுமாட்டை ஜெயமணியிடம் கொடுத்து பராமரிக்குமாறு கூறினார்.

மாடு விற்பதில் தகராறு

இந்தநிலையில் நேற்று மாலை சுப்பிரமணி குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். பின்னர் மனைவி ஜெயமணியிடம், ‘மாட்டை வைத்து நீ என்ன செய்ய போகிறாய்? அந்த மாட்டை விற்க வேண்டும். எனக்கும் அவசரமாக பணம் தேவைப்படுகிறது’ என்று கூறி தகராறில் ஈடுபட்டார்.

இதுகுறித்து ஜெயமணி தனது தந்தை பழனிச்சாமியிடம் கூறினார். அதைத்தொடர்ந்து அவர் அங்கு சென்று சுப்பிரமணியிடம், ‘மாட்டை விற்பதை பற்றி பேச உனக்கு அருகதை இல்லை. என்னுடைய மகளிடம் தான் மாட்டை கொடுத்து பராமரிக்குமாறு கூறியுள்ளேன். என்ன காரணத்துக்காக மாட்டை விற்க வேண்டும் என்று கூறுகிறாய்?’ என்றார். இதனால் சுப்பிரமணிக்கும், பழனிச்சாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

கத்தியால் குத்திக்கொலை

இதில் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி அருகே கிடந்த கத்தியை எடுத்து பழனிச்சாமியின் வயிற்றில் குத்தினார். இதில் குடல் சரிந்தநிலையில் சத்தம் போட்டபடி தரையில் விழுந்த பழனிச்சாமி பரிதாபமாக இறந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயமணி சத்தம் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு அருகே உள்ள வீட்டில் இருந்த மூர்த்தி ஓடி வந்தார். பின்னர் அவர் சுப்பிரமணியிடம், ‘எங்கள் தந்தையை கத்தியால் குத்தி கொன்றுவிட்டாயே!’ என்று கூறி தடுத்து அவரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் சுதாரித்துக்கொண்ட சுப்பிரமணி அவரையும் கத்தியால் உடலில் சரமாரியாக குத்தினார். இதில் அவரும் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

இதற்கிடையில் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். இதை பார்த்ததும் சுப்பிரமணி அங்கிருந்து தப்பி ஓடினார்.

வலைவீச்சு

இதைத்தொடர்ந்து இதுகுறித்து பவானி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பழனிச்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த மூர்த்தி ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சுப்பிரமணியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மாமனாரை கத்தியால் குத்தி மருமகன் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story