தினக்கூலி அடிப்படையில் துப்புரவு பணிகள் செய்ய அனுமதிக்க வேண்டும் கலெக்டரிடம் தொழிலாளர்கள் மனு


தினக்கூலி அடிப்படையில் துப்புரவு பணிகள் செய்ய அனுமதிக்க வேண்டும் கலெக்டரிடம் தொழிலாளர்கள் மனு
x
தினத்தந்தி 27 Dec 2016 3:30 AM IST (Updated: 27 Dec 2016 12:26 AM IST)
t-max-icont-min-icon

தினக்கூலி அடிப்படையில் துப்புரவு பணிகள் செய்ய அனுமதிக்கவேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் தொழிலாளர்கள் மனு கொடுத்தனர். மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நே

ஈரோடு

தினக்கூலி அடிப்படையில் துப்புரவு பணிகள் செய்ய அனுமதிக்கவேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி ரெ.சதீஸ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஏராளமானோர் பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர். கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்த 10 துப்புரவு தொழிலாளர்கள் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–

கவுந்தப்பாடி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 48 குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் துப்புரவு பணிகள் செய்ய 6 நிரந்தர பணியாளர்கள், 3 தொகுப்பூதிய பணியாளர்கள் மற்றும் 10 பேர் தினக்கூலி பணியாளர்களாக கடந்த 6 ஆண்டுகள் பணியாற்றி வந்தோம்.

தினக்கூலி அடிப்படையில்...

கடந்த 2015–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் எங்களை துப்புரவு பணிகள் செய்யுமாறு கூறினார்கள். நாங்களும் நிர்வாகம் கூறியபடி பணிகள் செய்து வந்தோம். 100 நாட்கள் வேலை பார்த்ததும் எங்களது குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்கில் சம்பள பணம் வரவு வைப்பதாக கூறினார்கள். அதன்படி 2015–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் 2016–ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நாங்கள் வெவ்வேறு வங்கி கணக்கில் தொடர்ச்சியாக வேலை பார்த்து வந்தோம்.

கடந்த 5 மாதங்களாக எங்களுடைய குடும்ப உறுப்பினர்களின் எந்த வங்கிக்கணக்கிலும் சம்பளம் வரவு வைக்கப்படவில்லை. இதனால் நாங்கள் குடும்பம் நடத்தமுடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே எங்களுக்கு வழங்கவேண்டிய சம்பளத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் நாங்கள் தினக்கூலி அடிப்படையில் தொடர்ந்து துப்புரவு பணிகள் செய்ய அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தார்கள்.

தர்ணா போராட்டம்

அந்தியூர் அருகே உள்ள தண்ணீர் பந்தல்பாளையம் பகுதியை சேர்ந்த 20–க்கும் மேற்பட்டோர் கலெக்டரிடம் கொடுத்திருந்த மனுவில், ‘நாங்கள் எங்கள் பகுதியில் உள்ள விடுதலை வாசல் திருச்சபைக்கு சென்று பிரார்த்தனை செய்து வந்தோம். அந்த பகுதியை சேர்ந்த சிலர் நாங்கள் பிரார்த்தனை செய்ய தடையாக உள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தொடர்ந்து பிரார்த்தனை செய்ய வழிவகை செய்யவேண்டும்.’ என்று கூறப்பட்டு இருந்தது.

பவானி நடராஜபுரம் பகுதியை சேர்ந்த வாசுதேவன் என்பவர் கொடுத்திருந்த மனுவில், ‘அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் எனது வீட்டை விலைக்கு வாங்கிய வகையில் இன்னும் ரூ.51 லட்சத்து 50 ஆயிரம் எனக்கு தரவேண்டும். அந்த தொகையை கேட்டால் அடியாட்கள் வைத்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே எனக்கு வரவேண்டிய பணத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும். இல்லையென்றால் எனது குடும்பத்தினருடன் வருகிற 29–ந் தேதி (வியாழக்கிழமை) சென்னையில் உள்ள ‘ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ்’ வளாகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்துவேன்.’ என்று கூறப்பட்டு இருந்தது.

247 மனுக்கள்

கூட்டத்தில் மொத்தம் 247 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ராதாமணி, மாவட்ட வழங்கல் அதிகாரி சுப்பிரமணியம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி எஸ்.வி.குமார், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி என்.ராமச்சந்திரன் உள்பட அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story