பட்டதாரி பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய கணவன்-மனைவி உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில்


பட்டதாரி பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய கணவன்-மனைவி உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 27 Dec 2016 3:45 AM IST (Updated: 27 Dec 2016 12:26 AM IST)
t-max-icont-min-icon

பட்டதாரி பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய கணவன்-மனைவி உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. பட்டதாரி பெண் ஈரோடு வீரப்பன்சத்திரம் கொத்துக்காரன்வீதியை சேர்ந்தவர் பாலசண்முகம். இவருடைய மகள் மணிமொ

ஈரோடு,

பட்டதாரி பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய கணவன்-மனைவி உள்பட 3 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

பட்டதாரி பெண்

ஈரோடு வீரப்பன்சத்திரம் கொத்துக்காரன்வீதியை சேர்ந்தவர் பாலசண்முகம். இவருடைய மகள் மணிமொழி (வயது 27). இவர் பி.எஸ்சி. பட்டப்படிப்பு முடித்து ஷேர்மார்க்கெட்டில் பணியாற்றி வந்தார். இவருடைய உறவினரான சண்முகம் (62) ஈரோடு வீரப்பன்சத்திரம் கலைவாணர் வீதியில் வசித்து வருகிறார். சண்முகம் மனைவி சாந்தி (52). இவர்களுடைய மகன் கார்த்திக் (26).

சண்முகத்தின் வீட்டிற்கு மணிமொழி அடிக்கடி சென்று வருவார். இதனால் அவரை கார்த்திக்கிற்கு திருமணம் செய்து வைப்பதாக சண்முகமும், சாந்தியும் மணிமொழிக்கு ஆசை வார்த்தை கூறினார்கள். மேலும், மணிமொழி ஷேர்மார்க்கெட்டில் பணியாற்றி வருவதால் அவருடைய வருமானத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் இருந்து வந்துள்ளனர்.

தற்கொலை

இந்தநிலையில் சண்முகம் வீட்டில் உள்ள 7 பவுன் நகையை மணிமொழியின் பெயரில் அடகு வைத்து பணத்தை பெற்றனர். அதன்பின்னர் அவர்கள் பணம் குறைவாக கொடுத்ததால் மணிமொழி 4 பவுன் நகையை மட்டும் மீட்டு கொடுத்தார். எனவே மீதமுள்ள 3 பவுன் நகையை மீட்டுத்தருமாறு கார்த்திக், சண்முகம், சாந்தி ஆகியோர் மணிமொழியை மிரட்டினார்கள். இந்த பிரச்சினை தொடர்பாக மணிமொழி மீது அவர்கள் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதற்கிடையில் கடந்த 23-2-2013 அன்று மணிமொழி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு சாவுக்கான காரணம் குறித்து எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் மணிமொழியை தற்கொலைக்கு தூண்டியதாக கார்த்திக், அவருடைய தந்தை சண்முகம், தாய் சாந்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் 3 பேர் மீதும் ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

10 ஆண்டு ஜெயில்

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் திருமண ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியும், நகையை கேட்டு மிரட்டியும், போலீசில் புகார் கொடுத்து அவமானப்படுத்தியும் மணிமொழியை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக கார்த்திக், சண்முகம், சாந்தி ஆகியோருக்கு தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி திருநாவுக்கரசு தனது தீர்ப்பில் கூறினார். இந்த வழக்கில் அரசு வக்கீல் சுமதி ஆஜரானார். 

Next Story