லாரி டிரைவரை தாக்கி பணம் பறிப்பு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த தேங்கலக்குடியை சேர்ந்தவர் மலர்வண்ணன் (வயது 29). லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவு இவர் ராஜபாளையத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் இருந்து நூல் பண்டல்களை ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி லாரியில் சென்று கொண்டிரு
கொடைரோடு
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த தேங்கலக்குடியை சேர்ந்தவர் மலர்வண்ணன் (வயது 29). லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவு இவர் ராஜபாளையத்தில் உள்ள ஒரு தனியார் மில்லில் இருந்து நூல் பண்டல்களை ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி லாரியில் சென்று கொண்டிருந்தார். தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லாமல் செக்காணூரனி பகுதி வழியாக சென்று கொண்டிருந்தார். பின்னர் நாகமலை என்ற இடத்தில் இருந்து நான்கு வழிச்சாலைக்கு செல்லும் இணைப்பு சாலை அருகே அவர் வந்த போது, 2 பேர் லாரியை மறித்து நிறுத்தினர்.
அதைத்தொடர்ந்து கண்இமைக்கும் நேரத்திற்குள் லாரியில் ஏறிய அவர்கள் மலர்வண்ணனை தாக்கத்தொடங்கினர். இதற்கிடையே அப்பகுதியில் உள்ள புதரில் மறைந்திருந்த மேலும் 2 பேரும் அங்கு வந்து டிரைவரை கட்டையால் தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.8 ஆயிரத்து 500–ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். படுகாயமடைந்த மலர்வண்ணன் உதவிக்கு ஆள் இல்லாமல் தவித்தார். பின்னர் அவரே லாரியை மீண்டும் ஓட்டிக்கொண்டு கொடைரோடு அருகே உள்ள பள்ளபட்டி பிரிவு என்ற இடத்திற்கு வந்தார்.
இதற்கிடையே அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு ரோந்து பணிக்காக வந்தனர். அவர்களை பார்த்ததும் லாரியை நிறுத்திய மலர்வண்ணன், போலீசாரிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிசிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை தாக்கிவிட்டு பணத்தை பறித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.