கோத்தகிரியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க அலைமோதிய பொதுமக்கள் கூடுதல் பணியாளர்களை நியமிக்க கோரிக்கை


கோத்தகிரியில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க அலைமோதிய பொதுமக்கள் கூடுதல் பணியாளர்களை நியமிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 27 Dec 2016 3:30 AM IST (Updated: 27 Dec 2016 1:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. கூடுதல் பணியாளர்களை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ரேஷன்கார்டில் ஆதார் எண் இணைக்கும் பணி தமிழக அரசு ரேஷன் கார்டுடன் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்க

கோத்தகிரி,

கோத்தகிரியில் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. கூடுதல் பணியாளர்களை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ரேஷன்கார்டில் ஆதார் எண் இணைக்கும் பணி

தமிழக அரசு ரேஷன் கார்டுடன் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களது ஆதார் எண்களையும் இந்த மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. ஆதார் எண் இணைக்கப்பட்ட பிறகு வருகிற மார்ச் மாதத்திற்குள் ரேஷன் கார்டுகளுக்குப் பதிலாக புதிய ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் வங்கிகளிலும் ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால் ஆதார் அடையாள அட்டைக்காக புகைப்படம் எடுக்க பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மையங்களில் தினந்தோறும் குவிந்த வண்ணம் உள்ளனர். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வரிசையில் நின்றும் கூட ஒரு சிலர் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க முடியாமல் திரும்பி செல்ல வேண்டிய நிலை உள்ளது. கோத்தகிரி தாலுகா அலுவலகத்தை பொறுத்தவரை தினமும் ஏராளமான பொதுமக்கள் ஆதார் அடையாள அட்டை எடுக்க குவிந்து வருகிறார்கள். கூட்டம் அலைமோதுவதால் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை உள்ளது.

ஆன்லைன் முறையால் தாமதம்

இதுகுறித்து அங்கு ஆதார் புகைப்படம் எடுக்கும் ஊழியர்கள் கூறும் போது, முன்பு ஆதார் புகைப்படம் எடுத்து பதிவு செய்வது மிகவும் எளிதாக இருந்ததால் தினந்தோறும் சுமார் 60 பேரில் இருந்து அதிகபட்சம் 100 பேர் வரை புகைப்படம் எடுக்க முடிந்தது. ஆனால் தற்போது ஆன்லைன் பதிவு செய்யும் முறையால் அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய ஒரு நபருக்கு சுமார் 20 நிமிடங்கள் ஆகிறது.

மேலும் வயதானவர்களுடைய கைரேகை உடனடியாக ஸ்கேன் ஆகாததால் அவர்களுக்கு சுமார் 30 நிமிடங்கள் தேவைப்படுகிறது. இங்கு 2 கம்ப்யூட்டர்கள் மூலம் ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்றாலும் அதில் ஒரு கம்ப்யூட்டரில் இதுவரை ஆதார் எடுக்காதவர்களுக்கு மட்டுமே புகைப்படம் எடுக்கும் வகையில் உள்ளது. எனவே ஒரு கம்ப்யூட்டரில் மட்டுமே ஆதார் புகைப்படம் எடுப்பதாலும், தற்போது மாற்றியமைக்கப்பட்ட ஆன்லைன் முறையாலும் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள் பலர் வரிசையில் நின்றும் கூட புகைப்படம் எடுக்க முடியாத நிலை உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கூடுதல் பணியாளர்கள்

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என்பதால் குழந்தைகள் மற்றும் முதியோருடன் இங்கு வந்து பல மணி நேரம் வரிசையில் காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது. வரிசையில் நின்றும் இன்று புகைப்படம் எடுக்க முடியாது. நாளை வாருங்கள் என்று கூறுவதால் நாங்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டி நிலை உள்ளது. எனவே கூடுதல் பணியாளர்களை நியமித்து ஆதார் அட்டை எடுக்கும் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் கம்ப்யூட்டர் வசதியையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story