ஊட்டி அருகே மதுக்கடையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
ஊட்டி அருகே சோலூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற கோரி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
ஊட்டி,
ஊட்டி அருகே சோலூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற கோரி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சங்கர் தலைமை தாங்கினார். இதில் சாலைவசதி, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் 105 மனுக்களை அளித்தனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் சங்கர் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் ஊட்டி அருகே உள்ள சோலூர் கிராம ஊர்தலைவர் ஆலன், செயலாளர் போஜன் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் தங்களது கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–
கோவில் அருகே மதுக்கடைசோலூர் கிராமத்தில் மட்டும் 360 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். மேலும் இதன் அருகில் உள்ள கோக்கால் உள்பட பல்வேறு கிராமங்களில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சோலூர் கிராமத்தில் ஒரு டாஸ்மாக் மதுக்கடை இயங்கி வருகிறது.
இந்த டாஸ்மாக் மதுக்கடை அருகில் ஒரு கோவிலும், அரசு பள்ளியும் உள்ளது. சாலையோரங்களில் குடிமகன்கள் அமர்ந்து குடித்துவிட்டு அங்கேயே தள்ளாடியபடி உலா வருகின்றனர். மேலும் குடிமகன்கள் போதையில் அருவருக்கதக்க வகையில் பேசுகின்றனர்.
3 ஆண்டுகளாக போராட்டம்குடிமகன்களின் அருவருக்கதக்க செயல்களால் அந்த வழியாக பெண்கள், மாணவ–மாணவிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி கடந்த 3 ஆண்டுகளாக போராடி வருகின்றோம். கடந்த 20.4.2014 அன்று இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி எங்களது கிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதனை தொடர்ந்து டாஸ்மாக் உதவி மேலாளர், டாஸ்மாக் மதுக்கடையை ஒருமாதத்திற்குள் அகற்றிவிடுவோம் என்று உறுதி அளித்தனர். இதனால் நாங்கள் அமைதியாக இருந்துவந்தோம். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்த பட்டியில் சோலூர் கிராம டாஸ்மாக் மதுக்கடை மூடப்படாததால் நாங்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளோம். கிராம மக்களின் நலன்கருதி இந்த டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டும். இல்லையென்றால் இந்த பகுதி பெண்கள் ஒன்றிணைந்து தொடர் போராட்டங்கள் நடத்துவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் கலைந்து போகும்படி கூறினர். ஆனால் டாஸ்மாக் மதுக்கடையை 3 நாட்களுக்குள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தால் மட்டுமே செல்வோம் என்று பெண்கள் கூறினார்கள். இதனால் போலீசாருக்கும், கிராம பெண்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கிராம பெரியவர்கள் மற்றும் போலீசார் கிராம பெண்களை சமாதானப்படுத்தியதால், அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.