வால்பாறை அருகே ரேஷன்கடையை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம்


வால்பாறை அருகே ரேஷன்கடையை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 27 Dec 2016 3:15 AM IST (Updated: 27 Dec 2016 1:34 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை அருகே ரேஷன்கடையை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன. காட்டு யானைகள் அட்டகாசம் வால்பாறை அருகே உள்ள லோயர்பாரளை எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு சேதங்களை ஏற்படுத்தி வந்த 2 குட்டிகள் கொண்ட 9 யானைகள் கொண்ட கூட்டம் அங்கிருந்

வால்பாறை

வால்பாறை அருகே ரேஷன்கடையை உடைத்து காட்டுயானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன.

காட்டு யானைகள் அட்டகாசம்

வால்பாறை அருகே உள்ள லோயர்பாரளை எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு சேதங்களை ஏற்படுத்தி வந்த 2 குட்டிகள் கொண்ட 9 யானைகள் கொண்ட கூட்டம் அங்கிருந்து சென்று நேற்றுமுன்தினம் அதிகாலை பச்சைமலை எஸ்டேட் பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் முகாமிட்டிருந்தது. இந்த யானைகள் கூட்டம் நேற்று நள்ளிரவு 2.30 மணிக்கு கருமலை எஸ்டேட்டில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் உள்ள கருமலை எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தன.

பின்னர் அங்கிருந்த மல்லிகை மகளிர் சுயஉதவிக்குழு ரேஷன்கடை முழுவதையும் உடைத்து கடைக்குள் புகுந்து 50 கிலோ ரேஷன் அரிசி மூட்டையை வெளியே எடுத்து காட்டுயானைகள் தின்றுவிட்டு மண்எண்ணெய் பேரல்களை உருட்டிவிட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டது. மேலும் கடைக்குள் இருந்த மற்ற அரிசி மூட்டைகளை எடுக்க முயற்சித்தன.

வனத்துறைக்கு தகவல்

அதற்குள் எஸ்டேட் பகுதிமக்கள் யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தொழிலாளர்களை எதிர்த்து விரட்டிய காட்டு யானைகள் மீண்டும் ரேஷன்கடைக்குள் புகுந்தன. அப்போது வால்பாறை வனச்சரக மனித–வனவிலங்கு மோதல் தடுப்பு வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சத்தம் போட்டும், பட்டாசு வெடித்தும் காட்டு யானைகளை விரட்டினர்.

இதையடுத்து யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன. ஆனால் அந்த கூட்டத்தை சேர்ந்த 2 யானைகள் மட்டும் வனப்பகுதியில் இருந்து காலை 8 மணிக்கு மீண்டும் ரேஷன்கடையை நோக்கி சென்றது. அப்போது ரேஷன்கடைக்குள் புகாமல் இருக்க எஸ்டேட் பகுதி மக்கள் யானைகளை விரட்டினர். ஆனால் யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் கருமலையில் இருந்து பொள்ளாச்சிக்கு செல்லும் வழியில் நின்று எஸ்டேட் பகுதி மக்களை விரட்டின. இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ரேஷன் பொருட்கள் வீணாகிறது

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:–

கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள மல்லிகை மகளிர் சுயஉதவிக்குழு ரேஷன் கடையை காட்டுயானைகள் 50–க்கும் மேற்பட்ட தடவைகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளன. இந்த ரேஷன்கடை எஸ்டேட் தொழிலாளர்கள் குடியிருப்பில் உள்ள ஓரு வீட்டில் செயல்படுவதாலும், வனப்பகுதியை ஒட்டியுளள்ள இடத்தில் அமைந்துள்ளதாலும் யானைகள் இந்த ரேஷன்கடையை உடைத்து சேதப்படுத்தி கொண்டேயிருக்கிறது. இதனால் குடியிருப்பு பகுதி மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. மேலும் தொடர்ந்து காட்டுயானைகள் அட்டகாசத்தால் அரசின் ரேஷன் பொருட்கள் வீணாகிறது. எனவே கருமலை பஜார் பகுதியில் அதிகளவில் மக்கள் குடியிருப்புக்கு அருகில் ரேஷன்கடைக்கு மாற்று இடம் வழங்கினால் காட்டுயானைகள் தாக்குதலில் இருந்து ரேஷன்கடையையும், பொதுமக்களையும் பாதுகாக்க முடியும். இது குறித்து வால்பாறை தாசில்தாருக்கு பலமுறை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story