அவினாசி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயற்சி வாலிபர் கைது


அவினாசி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயற்சி வாலிபர் கைது
x
தினத்தந்தி 27 Dec 2016 3:15 AM IST (Updated: 27 Dec 2016 1:47 AM IST)
t-max-icont-min-icon

அவினாசி அருகே பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– சிறுமி மாயம் நீலகிரி மாவட்டம் ஊட்டி கொண்டிமேடு பகுதியை சேர்ந்த சலீம் என்பவரின் மகன் அப்பாஸ் (வயது 22). இவர்

திருப்பூர்,

அவினாசி அருகே பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

சிறுமி மாயம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி கொண்டிமேடு பகுதியை சேர்ந்த சலீம் என்பவரின் மகன் அப்பாஸ் (வயது 22). இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி, அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில், அப்பாஸ் தங்கி இருந்த வீட்டின் அருகில் 4 வயது சிறுமி தனியாக விளையாடிக்கொண்டு இருந்தாள். அந்த சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அப்பாஸ் அங்கிருந்து அழைத்துச்சென்றுள்ளார். இதை அறியாத சிறுமியின் பெற்றோர், விளையாடிக்கொண்டு இருந்த தங்கள் மகள் மாயமானதால் அதிர்ச்சி அடைந்தனர்.

பாலியல் பலாத்காரம்

அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் சிறுமி கிடைக்காததால் இதுபற்றி உடனடியாக அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது, அந்த பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுவர்கள், அப்பாஸ் தான் அந்த சிறுமியை அழைத்து சென்றதாக கூறினார்கள்.

உடனே அப்பாசை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அந்த சிறுமியை சாக்லேட் வாங்கித்தருவதாக அழைத்து சென்று, அருகில் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து அவளை பாலியல் பலாத்காரம் செய்ததும், அவள் சத்தம் போட்டதால், அங்கு கிடந்த மரக்கட்டையால் சிறுமியின் தலையில் கொடூரமாக அடித்து அருகில் உள்ள குட்டை பகுதியில் வீசியதும் தெரியவந்தது.

உயிருக்கு போராட்டம்

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த குட்டைப்பகுதிக்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ரத்த வெள்ளத்தில் அந்த சிறுமி உயிருக்காக போராடிக்கொண்டு இருந்தாள். உடனே அந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.

அங்கு அந்த சிறுமிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் நேற்று முன்தினம் நள்ளிரவு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அந்த சிறுமி அனுமதிக்கப்பட்டாள். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிறுமியை பரிந்துரை செய்து தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் அனுப்பிவைத்தது.

மருத்துவமனையில் அலைக்கழிப்பு

இதைத்தொடர்ந்து சிறுமியை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவளுடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவுக்கு சிறுமியை கொண்டு சென்றபோது, அங்கிருந்த டாக்டர்கள் குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்ல கூறினார்கள்.

குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்றபோது, அங்குள்ள டாக்டர்கள் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர். உடனடியாக சிறுமியை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிப்பு செய்ததால் சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும் ஆத்திரம் அடைந்தனர்.

கொலை முயற்சி

அத்துடன் அவர்கள் அங்கிருந்த டாக்டர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அந்த சிறுமி, குழந்தைகள் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, தனது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் வாலிபர் அப்பாஸ் மீது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது, அடித்து கொலை செய்ய முயற்சி செய்தது உள்பட பல்வேறு பிரிவின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி, சப்–இன்ஸ்பெக்டர்கள் சசிகலா, நாச்சம்மாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

வாலிபர் கைது

இதுதொடர்பாக அப்பாசை கைது செய்த போலீசார், அவரை திருப்பூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நேற்று மாலை ஆஜர்படுத்தினார்கள். மகிளா கோர்ட்டு நீதிபதி(பொறுப்பு) ஏ.முகமதுஜியாபுதீன், அப்பாசிடம் விசாரணை செய்தார்.

பின்னர் அப்பாசை வருகிற 9–ந் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அப்பாஸ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story