திருப்பூரில் புழுக்களுடன் குடிநீர் வினியோகம் பெண்கள் பாட்டிலுடன் வந்து கலெக்டரிடம் முறையீடு


திருப்பூரில் புழுக்களுடன் குடிநீர் வினியோகம் பெண்கள் பாட்டிலுடன் வந்து கலெக்டரிடம் முறையீடு
x
தினத்தந்தி 27 Dec 2016 3:30 AM IST (Updated: 27 Dec 2016 1:47 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் வஞ்சிப்பாளையத்தில் புழுக்களுடன் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக கூறி அந்த குடிநீரை பாட்டில்களில் எடுத்து வந்து நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர். புழுக்களுடன் குடிநீர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீ

திருப்பூர்,

திருப்பூரில் வஞ்சிப்பாளையத்தில் புழுக்களுடன் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக கூறி அந்த குடிநீரை பாட்டில்களில் எடுத்து வந்து நேற்று கலெக்டரிடம் மனு கொடுத்து முறையிட்டனர்.

புழுக்களுடன் குடிநீர்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் எஸ்.ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி 58–வது வார்டு பகுதியை சேர்ந்த பெண்கள் 50–க்கும் மேற்பட்டவர்கள், புழுக்கள் நெளிந்த நிலையில் தண்ணீரை பாட்டில்களில் எடுத்து வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

இடுவம்பாளையம் அருகே வஞ்சிப்பாளையத்தில் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் சாக்கடை கால்வாய் வசதியில்லை. இதனால் வீடுகளுக்கு முன் குழி தோண்டி கழிவுநீர் தேக்கி வைக்கப்பட்டு, அதன்பிறகு மாநகராட்சி லாரி மூலம் உறிஞ்சி அகற்றி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக லாரிகள் வராததால் கழிவுநீர் வீடுகளின் முன் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி மூலம் வாரத்துக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டபோது குடிநீரில் புழுக்கள் கலந்து வருகிறது. மேலும் குடிநீர் மிகவும் கலங்கலாக சாம்பல் நிறத்துடன் வருகிறது. இந்த நீரை குடிப்பதற்கு பயன்படுத்த முடியவில்லை. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்களுக்கு சுகாதாரமான குடிநீர் மற்றும் சாக்கடை கால்வாய் வசதி செய்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

மாற்றுத்திறனாளிகள்

கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தை சேர்ந்தவர்கள் தலைவர் பழனிச்சாமி தலைமையில் அளித்த மனுவில், ‘அவினாசி ஒன்றியம் மங்கரசு வலையபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பேரநாயக்கன்புதூரில் 210 பேருக்கு அரசு சார்பில் வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அந்த நிலத்துக்கு செல்லும் பாதையை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலத்துக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எங்கள் நிலத்துக்குள் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றிக்கொடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

ஊத்துக்குளி அருகே எஸ்.பெரியபாளையம் கே.கே.நகர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் மக்கள் தொகை அதிகரிப்பு ஏற்ப குடிநீர் வழங்குவது இல்லை. எனவே தற்போது 4 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்குவதை 6 லட்சம் லிட்டராக தினமும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

பஸ் வசதி

பொங்கலூர் ஒன்றியம் அலகுமலை ஊராட்சி பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘கோவில்பாளையம் கிராமத்தில் கிராம சேவை மையம் கட்டப்பட்டு திறப்பு விழா செய்து 5 மாதங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் இன்னும் அந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு வரவில்லை. இ–சேவை மையம் அந்த கட்டிடத்தில் தொடங்காததால் மக்கள் சான்றிதழ்கள் பெற திருப்பூர் தாசில்தார் அலுவலகத்துக்கு வரவேண்டியுள்ளது. எனவே இ–சேவை மையத்தை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

கண்டியன்கோவில் பெரியாரிபட்டியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘எங்கள் கிராமத்தில் 400–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகிறோம். எங்கள் கிராமத்துக்கு சரிவர பஸ் போக்குவரத்து வசதியில்லை. ஊரில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் நடந்து சென்று பஸ் ஏற வேண்டியுள்ளது. எனவே எங்கள் கிராமத்துக்கு பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

டாஸ்மாக் கடை

ஊத்துக்குளி ஒன்றியம் சேடர்பாளையத்தை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், ‘செட்டிப்பாளையம் பிரிவில் டாஸ்மாக் கடை உள்ளது. மொரட்டுப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ–மாணவிகள் செட்டிப்பாளையம் பிரிவில் உள்ள பஸ் நிலையத்துக்கு வந்து செல்கிறார்கள். பொதுமக்களும் பஸ் ஏற அங்கு செல்கிறார்கள். ஆனால் டாஸ்மாக் கடை இருப்பதால் மதுப்பிரியர்களின் தொந்தரவு காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். எனவே இந்த டாஸ்மாக் கடையை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.


Next Story