திருச்சி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹேமங்பதானி தொடங்கி வைத்தார்


திருச்சி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹேமங்பதானி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 27 Dec 2016 5:00 AM IST (Updated: 27 Dec 2016 2:10 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹேமங்பதானி தொடங்கி வைத்தார். கிரிக்கெட் போட்டி திருச்சி மாவட்ட அளவில் 14 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி பஞ்சப்பூர் சாரநாதன

திருச்சி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹேமங்பதானி தொடங்கி வைத்தார்.

கிரிக்கெட் போட்டி

திருச்சி மாவட்ட அளவில் 14 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி பஞ்சப்பூர் சாரநாதன் என்ஜினீயரிங் கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியின் பயிற்சியாளருமான ஹேமங்பதானி தொடங்கி வைத்து வீரர்களுக்கு கைகொடுத்து வாழ்த்தினார்.

20 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் கேம்பியன், கமலா நிகேதன், பிருந்தாவன், மகாத்மா காந்தி, ஸ்ரீ விக்னேஷ் ரெங்கா, ஜோன் ஆர்க், ஆல்பா, ஜான் வெஸ்ட்ரி, விக்னேஷ் வித்யாலயா, ஸ்ரீரங்கம் ஆண்கள், ஆர்.வி.எஸ். இன்டர்நேஷனல், சின்மயா வித்யாலயா ஆகிய பள்ளி அணிகள் பங்கேற்றுள்ளன.

நேற்று முதல் ஆட்டத்தில் கேம்பியன் பள்ளி அணியும், கமலா நிகேதன் பள்ளி அணியும் மோதின. முதலில் ஆடிய கேம்பியன் பள்ளி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய கமலாநிகேதன் பள்ளி அணி 16.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அந்த அணியின் வீரர் தருண்ராகவ் 34 ரன்களும், சக்திசந்தோஷ் ஆட்டம் இழக்காமல் 33 ரன்களும் எடுத்தனர்.

சதம் அடித்த வீரர்

மற்றொரு போட்டியில் ஜான் வெஸ்ட்ரி பள்ளி அணியும், ஆல்பா கல்வி குழும பள்ளி அணியும் மோதின. இதில் முதலில் ஆடிய ஜான் வெஸ்ட்ரி பள்ளி அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆல்பா பள்ளி அணி வீரர்கள் அதிரடி ஆட்டத்தால் அந்த அணி 7.4 ஓவர்களில் விக்கெட்டு இழப்பின்றி 85 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.வி.எஸ். இன்டர்நேஷனல் பள்ளி அணியும் மற்றொரு ஆட்டத்தில் மோதின. இதில் முதலில் ஆடிய ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. அந்த அணியின் வீரர் ஏகாம்பரம் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். அவர் ஆட்டம் இழக்காமல் மொத்தம் 111 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய ஆர்.வி.எஸ். பள்ளி அணி 18.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 61 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவிது. ஸ்ரீரங்கம் ஆண்கள் பள்ளி அணியின் வீரர் வசிகரன் அபாரமாக பந்து வீசி 18 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

30–ந்தேதி பரிசளிப்பு

மற்றொரு ஆட்டத்தில் ஸ்ரீ சாய் வித்யாலயா பள்ளி அணியும், மகாத்மா காந்தி நினைவு பள்ளி அணியும் மோதின. இந்த போட்டி 12 ஓவர்கள் கொண்டதாக நடத்தப்பட்டன. முதலில் ஆடிய ஸ்ரீ சாய் வித்யாலயா பள்ளி அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மகாத்மா காந்தி நினைவு பள்ளி 9.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டு இழப்புக்கு 76 ரன்கள் எடுத்து வெற்றியை ருசித்தது. தொடர்ந்து போட்டிகள் வருகிற 30–ந்தேதி வரை நடக்கிறது. 30–ந்தேதி மாலை பரிசளிப்பு விழா நடைபெறும். முன்னதாக தொடக்க விழாவில் ஹேமங்பதானி நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:–

இளம் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் 14 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. திருச்சி உள்பட மொத்தம் 8 மாவட்டங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் இறுதிபோட்டியில் முதல் இடம், 2–வது இடம் பிடிக்கும் மொத்தம் 16 அணிகளும் சென்னையில் 4 அணிகளும் சேர்த்து சென்னையில் நடைபெறும் போட்டிகளில் விளையாடும்.

இளம் வீரர்கள்

தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடங்கிய பிறகு இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜெகதீஸ், நடராஜ் ஆகியோருக்கு ரஞ்சி கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. 14 வயதிற்குட்பட்ட வீரர்களை ஊக்குவிப்பதற்காக இது போன்ற போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த வயதில் இருந்து தொடர்ந்து கடின பயிற்சியுடன் விளையாடினால் நல்ல வீரராக உருவாக வாய்ப்பு உள்ளது. இது போன்ற போட்டிகள் மூலம் வீரர்களை தேர்வு செய்து அவர்களை ஊக்குவித்தும், தேவையான உதவிகளை வழங்கியும் நல்ல வீரர்களாக உருவாக்க முடியும். இதில் உருவாகும் வீரர்களுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அணி, தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டி, ஐ.பி.எல். உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கலாம். இந்திய கிரிக்கெட் அணியில் அஸ்வின் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடுகிறார். டெஸ்ட் போட்டியில் கோலி தலைமையிலான அணி சிறப்பாக செயல்படுகிறது. இந்திய அணியில் 20 வயதிற்குட்பட்ட இளம்வீரர்கள் நன்றாக விளையாடுகின்றனர். டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பிங்கில் டோனி இல்லாத இடத்தை சகா, பட்டேல் நிரப்பி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பார்வையாளர்களை கவர்ந்த 3–ம் வகுப்பு மாணவன்

கேம்பியன் பள்ளி அணியுடன் மோதிய கமலா நிகேதன் பள்ளி அணியில் 3–ம் வகுப்பு மாணவன் ஹேமம் சுதேசன் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தான். வலது கை சுழற்பந்து வீச்சாளரான அவன் நன்றாக பந்து வீசி அசத்தினான். மொத்தம் 4 ஓவர்கள் வீசி ஒரு ஓவர் மெய்டனாக்கி 8 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தான். அவனது பந்து வீச்சு அனைவரையும் கவர்ந்தது. ஹேமங் பதானியும் அந்த சிறுவனை பாராட்டினார்.


Next Story