காரைக்காலில் சுனாமி நினைவிடத்தில் அமைச்சர் கமலக்கண்ணன் அஞ்சலி


காரைக்காலில் சுனாமி நினைவிடத்தில் அமைச்சர் கமலக்கண்ணன் அஞ்சலி
x
தினத்தந்தி 27 Dec 2016 3:45 AM IST (Updated: 27 Dec 2016 2:24 AM IST)
t-max-icont-min-icon

சுனாமி தாக்கிய நினைவு தினம் நேற்று காரைக் காலில் அனுசரிக்கப்பட்டது. அதனையொட்டி சுனாமி நினைவிடத்தில் அமைச்சர் கமலக் கண்ணன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சுனாமி தாக்குதல் காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, காசாக்குடிமேடு, கோட்டுச்சே

காரைக்கால்,

சுனாமி தாக்கிய நினைவு தினம் நேற்று காரைக் காலில் அனுசரிக்கப்பட்டது. அதனையொட்டி சுனாமி நினைவிடத்தில் அமைச்சர் கமலக் கண்ணன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

சுனாமி தாக்குதல்

காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, காசாக்குடிமேடு, கோட்டுச்சேரிமேடு உள்பட 11 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர் கள் வசித்து வருகின்றனர். கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி கடலில் எழுந்த ஆழி பேரலைகள் தாக்கியதில் காரைக்கால் மாவட்டத்தில் கடலோர பகுதியில் வசித்து வந்த 492 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காணாமல் போனார்கள். 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. மீனவர்களின் மீன்பிடிபடகுகள், கட்டுமரங்கள் சேதம் அடைந்தன.

‘சுனாமி’ என்ற பெயரையும், சுனாமியால் எழுந்து வந்த ‘ஆழிப்பேரலை’களையும், அதன் கோர தாண்டவத்தையும் மக்கள் அப்பொழுதுதான் அறிந்தனர். மக்களை மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டுச் சென்ற வலியும், சுவடுகளும் இன்னமும் பாதிக்கப்பட்ட மக்கள் மனதிலிருந்து மறையவில்லை.

நினைவு தினம்

இந்த நிலையில் 12-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் காரைக்கால் மாவட்டத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது. காரைக்கால் கடற் கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவிடத்தில் சுனாமியின்போது இறந்தவர்களுக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க் கள் கே.ஏ.யு.அசனா, கீதா ஆனந்தன், கூடுதல் மாவட்ட கலெக்டர் மங்களாட் தினேஷ், மற்றும் அதிகாரிகள், பலர் கலந்துகொண்டு சுனாமி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்தும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.

தொடர்ந்து சுனாமியில் இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள நண்டலாறு மற்றும் போலகம் ஆகிய இடங்களிலும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

நண்டலாறு மற்றும் போலகம் பகுதிகளில் இறந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களில் இறந்தவர்களது குடும்பத்தினர் மெழுகுவர்த்தி, அகல்விளக்கு, ஊதுபத்தி ஏற்றியும், இறந்தவர்களுக்கு பிடித்தமான உணவுப் பொருட்கள், பழங்கள், இனிப்புகள் போன்ற பொருட் களை வைத்தும் படைத்து வணங்கினர்.

அரசியல் கட்சியினர் அஞ்சலி

காரைக்கால் கடற்கரை சுனாமி நினைவிடத்தில் மாவட்ட தி.மு.க. அமைப் பாளர் ஏ.எம்.எச்.நாஜிம் தலைமையில் தி.மு.க.வினரும், மாவட்ட தலைவர் ஏ.பாஸ் கரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினரும், மாவட்ட செயலாளர் சோ.அம்பலவாணன் தலைமையில் ம.தி.மு.க.வினரும், மாவட்ட செயலாளர் க.தேவமணி தலைமையில் பா.ம.க.வினரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

அதுபோன்று நாம்தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும், காரைக்கால் சேம்பர் ஆப் காமர்ஸ், காரைக்கால் என்ஜினீயர்ஸ் அண்டு பில்டர்ஸ் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் சுனாமி நினைவிடத்தில் மலர் வளையங்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

நண்டலாற்றங்கரையில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரியங்கா மற்றும் அவரது ஆதரவாளர்களும், மாவட்ட அவைத்தலைவர் எஸ்.பி. கருப்பையா தலைமையில் அ.தி.மு.க.வினரும், போலகத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஆனந்தன் தலைமையில் தி.மு.க.வினரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

மீன் பிடிக்க செல்லவில்லை

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு காரைக்காலில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களிலும் நேற்று தொழில் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

அதுபோன்று மீன்விற்பனையும் நடைபெறவில்லை. இதனால் மீனவர்களது விசைப்படகுகள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலும், பைபர் படகுகள் காரைக்கால் அரசலாறு மற்றும் அந்தந்த மீனவ கிராமங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

Next Story