புதுச்சேரி விமானதள விரிவாக்கத்துக்கு நில ஆர்ஜிதபணி தொடக்கம் நாராயணசாமி தகவல்


புதுச்சேரி விமானதள விரிவாக்கத்துக்கு நில ஆர்ஜிதபணி தொடக்கம் நாராயணசாமி தகவல்
x
தினத்தந்தி 27 Dec 2016 3:30 AM IST (Updated: 27 Dec 2016 2:24 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி விமானதள விரிவாக்கத்துக்கு நில ஆர்ஜித பணிகள் தொடங்கியுள்ளதாக முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார். புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– அங்கீகாரம் புதுவையில் வாழும் மலைவாழ் மக்க

புதுச்சேரி,

புதுச்சேரி விமானதள விரிவாக்கத்துக்கு நில ஆர்ஜித பணிகள் தொடங்கியுள்ளதாக முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார். புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அங்கீகாரம்

புதுவையில் வாழும் மலைவாழ் மக்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனாதிபதி அங்கீகாரம் அளித்துள்ளார். புதுவை மாநிலத்தில் மலைவாழ் மக்களே இல்லை என்று முன்பு மத்திய அரசு கூறியது. இதுதொடர்பாக புதுவை அரசின் வற்புறுத்தலின்பேரில் மத்திய அரசு குழு அமைத்தது.

இந்த குழுவினர் விசாரணை நடத்தி மத்திய அரசுக்கு அறிக்கை அளித்தனர். மத்திய மந்திரியாக தங்கபாலு இருந்தபோது அதற்கு இறுதிவடிவம் கொடுக்கப்பட்டது. இப்போது ஜனாதிபதி இருளர், வில்லி, வேட்டைக்காரன் போன்ற பிரிவுகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளார். மற்ற பிரிவுகளுக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

நிலம் ஆர்ஜிதம்

புதுவையில் இருந்து விமானப்போக்குவரத்தை தொடங்குவது குறித்து டெல்லி சென்றிருந்தபோது மத்திய விமானப்போக்குவரத்து மந்திரியை சந்தித்து பேசியுள்ளோம். அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதன்பின்னரே புதுவையில் விமானப்போக்குவரத்தை தொடங்க உள்ளவர்கள் யார்? என்ற விவரம் தெரியவரும்.

புதுச்சேரியிலிருந்து திருச்சி வழியாக பெங்களூர், புதுச்சேரியிலிருந்து திருப்பதி, கொச்சி, கோவை, ஐதராபாத் ஆகிய நகரங்களுக்கு சேவை தொடங்க கேட்டுள்ளோம். புதுச்சேரி விமானதள விரிவாக்கத்துக்கு இடம்தர தமிழக அரசு சம்மதித்து நில ஆர்ஜித பணிகளை தொடங்கியுள்ளது. அந்த இடத்தை புதுச்சேரி அரசு பெற்று மத்திய அரசிடம் ஒப்படைக்கும். அதன்பின் விமானதள விரிவாக்கம் நடைபெறும். விமானதள விரிவாக்கம் நடைபெற்றால் பெரிய விமானங்கள் நேரடியாக புதுச்சேரிக்கு வரும் வாய்ப்பு ஏற்படும்.

பிரதமருக்கு கடிதம்

புதுவை அரசு மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். மேலும் அங்கு பட்டமேற்படிப்புகளை தொடங்க அனுமதி அளிக்குமாறும், புதியதாக உருவாக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு அனுமதி அளிக்குமாறும் கேட்டுள்ளோம்.

புதுவையில் ரொக்கமில்லா பரிவர்த்தனை தொடர்பாக பிரதமருக்கு கடிதம் கொடுத்துள்ளேன். புதுவை மாநிலத்தில் வங்கிகள், ஏ.டி.எம்.களில் பணம் இல்லை. அதேபோல் ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு பண அட்டைகளை பயன்படுத்த தேவையான கட்டமைப்புகளும் புதுச்சேரியில் இல்லை. பணத்தட்டுப்பாடு காரணமாக ஏற்கனவே வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தின் வருவாயும் குறைந்துள்ளது.

ரொக்கமில்லா பரிவர்த்தனை

எனவே பண அட்டை மூலம் வர்த்தகம் என்பதை படிப்படியாகத்தான் கொண்டுவர முடியும். தற்போது முழுமையாக நிறைவேற்ற முடியாது என்று கூறியுள்ளேன். நடைமுறைக்கு ஒத்துவராததை செய்ய முடியாது. நாளை (புதன்கிழமை) திருவனந்தபுரத்தில் தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கவர்னரும், நானும் கலந்துகொள்கிறோம்.

இந்த கூட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள், மாநில அரசுகளுக்கு இடையேயான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும். இந்த கூட்டத்திலும் ரொக்கமில்லா பரிவர்த்தனை குறித்து பேச உள்ளேன்.

நீட் தேர்வு

நீட் தேர்வு மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு தொடர்பாக தெளிவான முடிவு இல்லாததால் கடந்த காலங்களில் குழப்பம் நிலவியது. நீட் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு புதுவையில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் 15 சதவீத இடம் வழங்கப்படும். நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான கல்விகட்டணத்தை கட்டணக்குழு நிர்ணயம் செய்யும். அதேபோல் சென்டாக் மாணவர்களுக்கும் உரிய இடம் வழங்கப்படும்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.


Next Story