பொன்னேரியில் கருகிய பயிருடன் விவசாயிகள் சாலை மறியல்
பொன்னேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி கருகிய பயிருடன் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நெற்பயிர்கள் சேதம் கடந்த 12–ந்தேதி ஏற்பட்ட ‘வார்தா’ புயல் காரணமாக பொன்னேரி சுற்று வட்டார பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு இரு
பொன்னேரி
பொன்னேரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி கருகிய பயிருடன் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெற்பயிர்கள் சேதம்கடந்த 12–ந்தேதி ஏற்பட்ட ‘வார்தா’ புயல் காரணமாக பொன்னேரி சுற்று வட்டார பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த நெற்பயிர்கள் சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
ஆனால் வேளாண்மைத்துறை அதிகாரிகள் சேதம் அடைந்த விவசாய நிலங்களை நேரில் பார்வையிடவில்லை என்று கூறி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லியிடம் விவசாயிகள் புகார் செய்தனர்.
பேரணிஇந்தநிலையில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பொன்னேரி வட்ட விவசாயிகள் நல சங்கத்தின் சார்பில் பொன்னேரியில் பேரணி நடைபெற்றது.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் சப்–கலெக்டரிடம் மனு அளிப்பதற்காக அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு தேரடித்தெரு வழியாக பேரணியாக அம்பேத்கர் சிலையை வந்தடைந்தனர்.
சாலை மறியல்பின்னர் அங்கு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கையில் கருகிய பயிருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருவொற்றியூர்–பொன்னேரி பஞ்செட்டி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொன்னேரி போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சாலை மறியலை கைவிட விவசாயிகள் மறுப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து பொன்னேரி சப்–கலெக்டர் தண்டபாணி நேரில் வந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், விவசாயிகளின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரடைந்தது.