கர்நாடகத்தில் தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளில் கன்னடர்களுக்கு 70 சதவீத இட ஒதுக்கீடு தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் லாட் பேட்டி


கர்நாடகத்தில் தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளில் கன்னடர்களுக்கு 70 சதவீத இட ஒதுக்கீடு தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் லாட் பேட்டி
x
தினத்தந்தி 27 Dec 2016 2:40 AM IST (Updated: 27 Dec 2016 2:40 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளில் கன்னடர்களுக்கு 70 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா தயாரிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ்லாட் கூறினார். தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் லாட் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்

பெங்களூரு

கர்நாடகத்தில் தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளில் கன்னடர்களுக்கு 70 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா தயாரிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ்லாட் கூறினார்.

தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் லாட் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

70 சதவீத இட ஒதுக்கீடு

கர்நாடகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளில் கன்னடர்களுக்கு கட்டாயமாக 70 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு மசோதா தற்போது சட்டத்துறையில் உள்ளது. இதற்கு சட்டத்துறையின் ஒப்புதல் கிடைத்ததும் இன்னும் 2 மாதங்களில் மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும்.

அதன் பிறகு இந்த மசோதா அமல்படுத்தப்படும். இந்த மசோதாப்படி தொழில் நிறுவனங்களில் ‘சி‘ மற்றும் ‘டி‘ பிரிவு வேலை வாய்ப்புகளில் 50 சதவீதமும், ‘ஏ‘ மற்றும் ‘பி‘ பிரிவுகளில் 20 சதவீதமும் கட்டாயமாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்த இட ஒதுக்கீட்டை கட்டாயப்படுத்த முடியவில்லை.

கன்னடர்களின் நலனை காக்க...

வரும் நாட்களில் இதுபற்றியும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். கன்னடர்களுக்கு 70 சதவீத இட ஒதுக்கீடு வழங்காத நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளை தற்போது வாபஸ் பெற வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை. இந்த மசோதா சட்ட வடிவம் பெற்ற பிறகு இதுபற்றி அரசு ஆலோசிக்கும். கர்நாடகத்தில் 16 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் உள்ளன.

இந்த எல்லா நிறுவனங்களிலும் முன்னுரிமை அடிப்படையில் கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். தற்போது தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு எவ்வளவு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் அரசிடம் இல்லை. கன்னடர்களின் நலனை காக்கும் நோக்கத்தில் நான் இந்த புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளேன்.

தொழிற்பயிற்சி

மாநிலத்தில் புதிதாக ஐ.டி.ஐ. நிறுவனங்களை தொடங்க அனுமதி கோரி 70 விண்ணப்பங்கள் வந்துள்ளன. நிதிநிலையை கவனத்தில் வைத்து இவற்றுக்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். படித்த இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சந்தோஷ் லாட் கூறினார்.


Next Story