சுனாமி 12–ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு: மாமல்லபுரம், கல்பாக்கத்தில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி


சுனாமி 12–ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு: மாமல்லபுரம், கல்பாக்கத்தில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
x
தினத்தந்தி 27 Dec 2016 4:15 AM IST (Updated: 27 Dec 2016 2:50 AM IST)
t-max-icont-min-icon

சுனாமி 12–ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களுக்கு மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். சுனாமி நினைவு தினம் தமிழகம் முழுவதும் கடற்கரை பகுதிகளில் கடந்த 2004–ம் ஆண்டு டிசம்பர

மாமல்லபுரம்,

சுனாமி 12–ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களுக்கு மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

சுனாமி நினைவு தினம்

தமிழகம் முழுவதும் கடற்கரை பகுதிகளில் கடந்த 2004–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26–ந்தேதி ஏற்பட்ட சுனாமி என்ற ஆழிப்பேரலையில் சிக்கி ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். ஏராளமானோர் காணாமல் போயினர். மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் 15–க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஆழிப்பேரலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.

சுனாமி ஏற்பட்டு 12 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நேற்று மாமல்லபுரம் தேவனேரி கடற்கரையில் மீனவ கிராம மக்கள் சார்பில், சுனாமி 12–ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தனியார் சுற்றுலா ஓட்டல் நிர்வாக இயக்குனர் போஸ்தர்மலிங்கம் தலைமை தாங்கினார். சுனாமியில் உயிர் நீத்தவர்களின் நினைவாக தேவனேரி மீனவ கிராம மக்கள், சுற்றுலா பயணிகள் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

வெளிநாட்டு பயணிகள்

சுனாமியால் பாதிக்கப்பட்ட தேவனேரி மீனவர் பகுதியைச் சேர்ந்த அதிக மதிப்பெண்கள் பெற்ற 10 மற்றும் 12–ம் வகுப்பு மாணவிகள் 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும் பொதுமருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம் நடந்தது. இதில் 200–க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் மாமல்லபுரம் திட்டக்குழு உறுப்பினர் கணேசன் உள்பட வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் பலர் கலந்து கொண்டனர்.

மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

சுனாமி நினைவு தினத்தையொட்டி மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மாமல்லபுரம், தேவனேரி, கொக்கிலமேடு, புதுஎடையூர்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் நேற்று கருப்பு ‘பேட்ஜ்’ அணிந்து துக்கம் அனுசரித்து, கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

மாமல்லபுரம் கடற்கரையில் மீனவர்கள் உள்பட ஏராளமானவர்கள் சுனாமியில் இறந்தவர்களின் நினைவாக கடலில் பால் ஊற்றி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

கல்பாக்கம்

கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம் உள்ளிட்ட கிராமங்களில் சுனாமியின் போது குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராளமானோர் பலியானார்கள். சுனாமி தாக்கத்தையும், இழப்பையும் நினைவாக கொண்டு கல்பாக்கம் அணுசக்தித்துறை ஊழியர்கள் குடியிருப்பு வளாகத்தில் அழகிய வடிவில் நினைவுத்தூண் நிறுவப்பட்டு சுனாமி பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று சுனாமியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அணுமின் நிலைய ஊழியர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுனாமி பூங்காவில் உள்ள நினைவுத்தூணில் மலர் வளையம் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

சதுரங்கப்பட்டினம் கடற்கரைக்கு சென்ற ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள், ஆட்டோ டிரைவர்கள் கடற்கரையில் உள்ள சுனாமி நினைவுத்தூணில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் கடலில் பால் ஊற்றி வணங்கினர். ஆட்டோக்களில் கருப்புகொடி ஏற்றி மவுன ஊர்வலம் சென்றனர்.


Next Story