உடலில் தீப்பிடித்து இளம்பெண் மர்மச்சாவு கணவரே தீ வைத்து கொன்றாரா? போலீஸ் விசாரணை


உடலில் தீப்பிடித்து இளம்பெண் மர்மச்சாவு கணவரே தீ வைத்து கொன்றாரா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 27 Dec 2016 4:00 AM IST (Updated: 27 Dec 2016 3:14 AM IST)
t-max-icont-min-icon

கணவருடன் ஏற்பட்ட தகராறில் தனி அறையில் படுத்து தூங்கிய இளம்பெண், உடலில் தீப்பிடித்து மர்மமான முறையில் இறந்தார். கணவரே அவரது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துக்கொன்றாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மனைவியுடன் தகராறு காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த கொழுமனிவாக்கம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்

பூந்தமல்லி

கணவருடன் ஏற்பட்ட தகராறில் தனி அறையில் படுத்து தூங்கிய இளம்பெண், உடலில் தீப்பிடித்து மர்மமான முறையில் இறந்தார். கணவரே அவரது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துக்கொன்றாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மனைவியுடன் தகராறு

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த கொழுமனிவாக்கம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சபரி(வயது 35). இவருடைய மனைவி வரலட்சுமி(30). இவர்களுக்கு புவனேஸ்வரி(9) என்ற மகளும், ஜீவானந்தம்(7) என்ற மகனும் உள்ளனர். சபரிக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. அவர், வேலைக்கு எங்கும் செல்லாமல் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்தார். வரலட்சுமி, கூலி வேலை செய்து தனது பிள்ளைகளை கவனித்து வந்தார்.

உடலில் தீப்பிடித்து சாவு

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டுக்கு வந்த சபரி, மனைவியுடன் தகராறு செய்தார். இதனால் வரலட்சுமி, கணவருடன் கோபித்துக்கொண்டு வீட்டின் மற்றொரு அறையில் சென்று தனியாக படுத்து தூங்கினார். நள்ளிரவில் திடீரென வரலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டது. இதனால் அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் தனி அறையில் உடலில் தீப்பிடித்து எரிந்த நிலையில் வரலட்சுமி அலறி துடிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த வரலட்சுமி, நேற்று மதியம் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கணவரிடம் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாங்காடு போலீசார், பலியான வரலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் வரலட்சுமி உடலில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்த அறையின் கதவு சாத்தப்படாமல் திறந்தே கிடந்தது. அவரே தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கான எந்த தடயமும் அங்கு இல்லை என போலீசார் தெரிவித்தனர்.

எனவே கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக்கொண்டு தனி அறையில் படுத்து தூங்கிய வரலட்சுமியின் உடலில் அவருடைய கணவர் சபரியே மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்தாரா? என்ற கோணத்தில் மாங்காடு போலீசார் சபரியை பிடித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story