வேலூரில், நள்ளிரவில் பரபரப்பு செம்மர கட்டை கடத்தல் கும்பல் வந்த கார் சிக்கியது போலீசாரை தள்ளிவிட்டு கும்பல் தப்பி ஓட்டம்


வேலூரில், நள்ளிரவில் பரபரப்பு செம்மர கட்டை கடத்தல் கும்பல் வந்த கார் சிக்கியது போலீசாரை தள்ளிவிட்டு கும்பல் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 28 Dec 2016 4:45 AM IST (Updated: 27 Dec 2016 6:27 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் போலீசார் நடத்திய சோதனையில் செம்மரக்கட்டை கடத்தல் கும்பல் வந்த கார் சிக்கியது. அதிலிருந்த கும்பல் போலீசாரை கீழே தள்ளிவிட்டு ஓட்டம் பிடித்தனர். பிடிபட்ட டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 5 பேர் தப்பி ஓட்டம் வேலூர் வடக்கு போலீஸ் (பொ

வேலூர்,

வேலூரில் போலீசார் நடத்திய சோதனையில் செம்மரக்கட்டை கடத்தல் கும்பல் வந்த கார் சிக்கியது. அதிலிருந்த கும்பல் போலீசாரை கீழே தள்ளிவிட்டு ஓட்டம் பிடித்தனர். பிடிபட்ட டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 பேர் தப்பி ஓட்டம்

வேலூர் வடக்கு போலீஸ் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்–இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சைதாப்பேட்டை முருகர் கோவில் பின்புறம் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. காருக்குள் இருந்தவர்களிடம் வெளியே நின்றவாறு 2 பேர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக சென்றனர்.

ஆனால் போலீசார் வருவதை பார்த்ததும் காருக்கு வெளியே நின்ற 2 பேரும் தப்பி ஓடினர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், காருக்குள் இருந்தவர்களை பிடிக்க முயன்றனர். அதே நேரத்தில் காருக்குள் இருந்து இறங்கிய 3 பேர் போலீசாரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். டிரைவர் சீட்டில் இருந்த ஒருவர் மட்டும் பிடிபட்டார்.

கார் பறிமுதல்

அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கு அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். அதைத்தொடர்ந்து போலீசார் காரை சோதனை நடத்தினர். அப்போது காரில் கத்தி மற்றும் இரும்பு ராடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கைப்பற்றிய போலீசார் பிடிபட்ட நபருடன் காரை பறிமுதல் செய்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் ஆலங்காயத்தை சேர்ந்த ரகமதுல்லா மகன் ஆரிமுல்லா (வயது 27) என்பது தெரியவந்தது. மேலும் அவர் கூறுகையில், ‘‘காரின் டிரைவர் தான் என்றும், தனக்கும் தப்பி ஓடிய 5 பேருக்கும் எந்த தொடர்பும் இல்லை. வாடகைக்கு கார் ஓட்டுவதற்காகவே அவர்கள் என்னை அழைத்து வந்தனர்’’ என்றார்.

கார் வெளி மாவட்ட பதிவெண் கொண்டதாலும், கத்தி பறிமுதல் செய்யப்பட்டதாலும் தப்பி ஓடியவர்கள் செம்மரக்கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில் காரில் இருந்து தப்பி ஓடியவர்கள் வேலூரை சேர்ந்த பிரபு, வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த அப்துல்லா, ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பைரோஸ் என்பது தெரிய வந்துள்ளது. காருக்கு வெளியே நின்றிருந்த 2 பேர் யார் என்பது தெரியவில்லை.

செம்மரம் கடத்தல்

காருக்குள் இருந்தவர்கள் லாரியில் செம்மரம் கடத்தி வரப்படுவதாகவும், அதை கடத்தி சென்று விட வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்ததாகவும் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டதும் தெரியவந்துள்ளது. எங்கிருந்து லாரியில் செம்மரம் கடத்தப்படுகிறது என்ற விவரம் தெரியவில்லை. தப்பிஓடிய நபர்கள் பிடிபட்டால் மட்டுமே உண்மையான விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். எனவே தப்பி ஓடியவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


Next Story