நில அபகரிப்பு வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணைபோலீஸ் சூப்பிரண்டு கைது


நில அபகரிப்பு வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணைபோலீஸ் சூப்பிரண்டு கைது
x
தினத்தந்தி 28 Dec 2016 4:30 AM IST (Updated: 27 Dec 2016 6:29 PM IST)
t-max-icont-min-icon

நில அபகரிப்பு வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை போலீஸ் சூப்பிரண்டை லஞ்சஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்த கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:– நிலம் அபகரிப்பு ஆற்காட்டை சேர்ந்தவர

வேலூர்,

நில அபகரிப்பு வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய துணை போலீஸ் சூப்பிரண்டை லஞ்சஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்த கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

நிலம் அபகரிப்பு

ஆற்காட்டை சேர்ந்தவர் குமரேசன் (வயது 52). இவரது மனைவி சுஜாதா. இவருடைய பெயரில் வேலூரை அடுத்த பூட்டுத்தாக்கு கிராமத்தில் 7,500 சதுர அடி நிலம் இருந்தது.

இந்த நிலத்தை விற்பதற்காக சுஜாதா, தனது உறவினர் பெயருக்கு பவர் பட்டா வழங்கினார். ஆனால் பவர் பட்டாபெற்ற நபர், குமரேசன் மற்றும் சுஜாதாவுக்கு தெரியாமல் நிலத்தை விற்று பணத்தை பெற்றுக்கொண்டார். அந்த பணத்தை குமரேசனுக்கு கொடுக்காமல் ஏமாற்றியதாக தெரிகிறது.

இதுபற்றி குமரேசன் கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள நில அபகரிப்பு பிரிவில் குமரேசன் புகார் செய்தார்.

ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டார்

இதுகுறித்து ஏற்கனவே 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விரைவில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று குமரேசன், நில அபகரிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு உஸ்மான் அலிகானை அணுகியிருக்கிறார். அப்போது விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றால் ரூ.5 லட்சம் லஞ்சமாக தரவேண்டும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு உஸ்மான் அலிகான் கேட்டதாக கூறப்படுகிறது. அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று குமரேசன் கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து ரூ.3½ லட்சம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏற்பட்டுள்ள பணம் தட்டுப்பாடு காரணமாக முதல் கட்டமாக ரூ.50 ஆயிரம் கொடுப்பதாக குமரேசன் கூறியுள்ளார். பின்னர் இதுபற்றி அவர் வேலூர் லஞ்சஒழிப்பு போலீசில் புகார் செய்துள்ளார்.

துணை போலீஸ் சூப்பிரண்டு கைது

இதனையடுத்து லஞ்சஒழிப்பு போலீசாரின் அறிவுரைபடி ரசாயனம் தடவப்பட்ட ரூ.50 ஆயிரம் பணத்துடன் குமரேசன் நேற்று காலை வேலூரில் உள்ள நில அபகரிப்பு தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு சென்றார். அவருடன் லஞ்ச ஒழிப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசாரும் சென்று மறைந்திருந்தனர்.

பின்னர் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு உஸ்மான் அலிகானிடம் ரூ.50 ஆயிரத்தை குமரேசன் கொடுத்தார். அதை வாங்கிய உஸ்மான் அலிகானை அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக ஊழியர்களிடத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story