வீரவநல்லூர் அருகே லாரி–மொபட் மோதல்; 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் பலி மேலும் ஒரு சிறுவன் கவலைக்கிடம்


வீரவநல்லூர் அருகே லாரி–மொபட் மோதல்; 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் பலி மேலும் ஒரு சிறுவன் கவலைக்கிடம்
x
தினத்தந்தி 28 Dec 2016 3:00 AM IST (Updated: 27 Dec 2016 7:16 PM IST)
t-max-icont-min-icon

வீரவநல்லூர் அருகே லாரியும், மொபட்டும் மோதிக் கொண்ட விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் ஒரு சிறுவன் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

சேரன்மாதேவி,

வீரவநல்லூர் அருகே லாரியும், மொபட்டும் மோதிக் கொண்ட விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும் ஒரு சிறுவன் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

லாரி–மொபட் மோதல்


நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா கல்லிடைக்குறிச்சி கரண்டை இடக்குடி தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சலூன் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் அவ்வப்போது விடுமுறையில் ஊருக்கு வந்து செல்வாராம். இந்தநிலையில் நேற்று காலையில் முருகன் தனது ஊருக்கு வந்துள்ளார். வந்ததும் முதல் வேலையாக அம்பைக்கு சென்றுள்ளார். அங்கு தனது மொபட்டுக்கு தவணை தொகையை கட்டிவிட்டு மீண்டும் ஊருக்கு வந்து தனது வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து மற்றொரு வேலையாக சேரன்மாதேவிக்கு புறப்பட்டுள்ளார்.

அப்போது தனது உறவினர்களின் மகன்கள் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள வைராவிகுளத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் மகன் பால்ராஜ் (7), கல்லிடைக்குறிச்சி தெற்கு புதுத்தெருவை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் மகன்கள் இசை வர்கீஸ் (7), இசை பட்டமுத்து (5) ஆகியோரையும் தனது மொபட்டில் ஏற்றிக் கொண்டு வந்தார்.

3 பேர் பலி

வீரவநல்லூரையொட்டி அமைந்துள்ள தனியார் ஆலையின் அருகே சென்ற போது, எதிரே செங்கல் லோடு ஏற்றி வந்த லாரியும், முருகனின் மொபட்டும் மோதிக் கொண்டன. இதில் மொபட்டில் வந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் முருகன் மற்றும் சிறுவர்கள் பால்ராஜ், இசை வர்கீஸ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்கள். இசை பட்டமுத்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயம் அடைந்த இசைபட்டமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் பலியான முருகன், பால்ராஜ், இசை வர்கீஸ் ஆகியோரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இசை பட்டமுத்துவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

லாரி டிரைவர் கைது

இந்த விபத்து தொடர்பாக இன்ஸ்பெக்டர் மதிவாணன் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் சேரன்மாதேவி அருகே உள்ள மேலக்கல்லூரை சேர்ந்த இசக்கி மகன் கொம்பையா (32) என்பவரை கைது செய்தார். முருகனுக்கு அமுதா என்ற மனைவியும், வீரா (22), சண்முகராஜ் (19) ஆகிய இரு மகன்களும் உள்ளனர். விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story