இரண்டாம் மணல் விற்பனையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நாமக்கல்லில் சம்மேளன தலைவர் அறிவிப்பு
தமிழகத்தில் இரண்டாம் மணல் விற்பனையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக நாமக்கல்லில் அதன் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி தெரிவித்தார். மணல் விற்பனையில் முறைகேடு நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள முல்லை நகரில் செயல்பட்டு வரும்
நாமக்கல்,
தமிழகத்தில் இரண்டாம் மணல் விற்பனையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக நாமக்கல்லில் அதன் சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி தெரிவித்தார்.
மணல் விற்பனையில் முறைகேடுநாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள முல்லை நகரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு சம்மேளன தலைவர் செல்ல.ராசாமணி தலைமை தாங்கினார். செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தை தொடர்ந்து செல்ல.ராசாமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:–
தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் நடந்து வரும் ஊழலை தவிர்க்க பொதுப்பணித்துறையினர் மூலமாக மணல் விற்பனையை செய்ய வேண்டும். தனியாருக்கு உரிமம் வழங்ககூடாது என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இந்த நிலையில் அரசு தனியார் மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கி உள்ளதால் அவர்கள் இரண்டாம் விற்பனையிலும் முறைகேடு செய்து வருகின்றனர். எனவே மணல் சேமிப்பு கிடங்கை அமைத்து பொதுப்பணித்துறை மூலமாகவே இரண்டாம் மணல் விற்பனை செய்ய வேண்டும். அத்துடன் ரொக்கமாக பரிவர்த்தனை செய்யப்படாமல் இ–சேவை மூலம் பரிவர்த்தனை செய்தால் பல்வேறு முறைகேடுகளை தவிர்க்க முடியும்.
கண்டன ஆர்ப்பாட்டம்அனைத்து மணல் குவாரிகளிலும் சி.சி.டி.வி. கேமரா அமைப்பது, அனைத்து லாரிகளுக்கும் ஆன்லைனில் புக்கிங் செய்வது, இ–சேவையை நடைமுறைபடுத்துவது ஆகிய 3 கோரிக்கைகளையும் நாங்கள் அரசுக்கு முன்வைக்கிறோம். இதுதொடர்பாக வருகிற ஜனவரி மாதம் 5–ந் தேதி எங்களை அழைத்து அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவ்வாறு பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிடில் தமிழகம் முழுவதும் உள்ள லாரி உரிமையாளர்கள் ஒன்று திரண்டு வருகிற ஜனவரி 6–ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த முடிவு செய்து உள்ளோம். இந்த ஆர்ப்பாட்டம் சென்னையில் உள்ள சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெறுகிறது.
மேலும் பல ஆண்டுகளாக மணல் விற்பனை தொழிலை பாதுகாக்க நாங்கள் போராடி வருகிறோம். ஆனால் இடையிடையே புதிது புதிதாக சங்கங்கள் ஏற்படுத்தப்படுகிறது. அவர்கள் எங்கள் சம்மேளனத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 200 சங்கங்கள் பதிவு செய்து உள்ளனர். அவர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். மணல் லாரிகளில் ஒரேஅளவு, ஒரே எடை, ஒரே விலை என்ற விதிமுறைகளை பின்பற்ற அரசாங்கம் உத்தரவு பிறப்பித்தால் மணல் விற்பனை தொழில் சிறப்பாக நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.