2 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்இருப்பு 10 டி.எம்.சி. ஆக குறைந்தது


2 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்இருப்பு 10 டி.எம்.சி. ஆக குறைந்தது
x
தினத்தந்தி 28 Dec 2016 4:30 AM IST (Updated: 27 Dec 2016 8:19 PM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணையின் நீர் இருப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு 10 டி.எம்.சி. ஆக குறைந்து உள்ளது. தண்ணீர் திறப்பு இந்த ஆண்டு பருவமழை கைகொடுக்காத நிலையில் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக கடந்த செப்டம்பர் மாதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பருவமழை

மேட்டூர்,

மேட்டூர் அணையின் நீர் இருப்பு கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு 10 டி.எம்.சி. ஆக குறைந்து உள்ளது.

தண்ணீர் திறப்பு

இந்த ஆண்டு பருவமழை கைகொடுக்காத நிலையில் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக கடந்த செப்டம்பர் மாதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பருவமழை கைகொடுக்காவிட்டாலும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி கர்நாடகம், தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய தண்ணீரை முழுமையாக அளிக்கும் என்ற எதிர்பார்ப்பும் வீணானது.

இதனால் அணைக்கு போதுமான நீர்வரத்து இல்லாத நிலையிலும் அணையில் இருந்து இன்று வரை டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைந்து கொண்டே வருகிறது.

10 டி.எம்.சி. ஆக குறைந்தது

குறிப்பாக கடந்த நவம்பர் மாதம் அணையின் நீர்மட்டம் 40 அடிக்குகீழ் குறைந்ததால் அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 750 கனஅடியாக குறைக்கப்பட்டது. அதேசமயம் அணைக்கு நீர்வரத்தும் மிகவும் குறைந்து விட்டது.

இதன் காரணமாக மேட்டூர் அணையில் உள்ள நீர்இருப்பை பயன்படுத்தி அடுத்த பருவமழை காலமான ஜூன் மாதம் வரை குடிநீர் தேவையை சமாளிக்க முடியுமா? என்ற அச்சம் நிலவி வருகிறது. அதாவது, நேற்றைய நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 10.89 டி.எம்.சி.யாக குறைந்து விட்டது. இதே நிலை கடந்த 2014–ம் ஆண்டு மே மாதத்தில் நிலவியது. அதன்பிறகு 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் மேட்டூர் அணையின் நீர்இருப்பு 10 டி.எம்.சி.யாக குறைந்து உள்ளது.

நீர்மட்டம் 37.62 அடி

ஆகவே, பருவமழை கைகொடுத்தால் மட்டுமே பாசன தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாவிட்டாலும் குடிநீர் தேவையையாவது சமாளிக்க முடியும். இதனால் கவலையடைந்து உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் வருணபகவானை வேண்டி வருகின்றனர்.

நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37.62 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 750 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வினாடிக்கு 148 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.


Next Story