சாலை விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்: மதுகுடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுவதால் விபத்துகள் நடக்கிறது காவலர் நலன் கூடுதல் இயக்குனர் மாகாளி பேட்டி


சாலை விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்: மதுகுடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுவதால் விபத்துகள் நடக்கிறது காவலர் நலன் கூடுதல் இயக்குனர் மாகாளி பேட்டி
x
தினத்தந்தி 28 Dec 2016 4:00 AM IST (Updated: 27 Dec 2016 8:24 PM IST)
t-max-icont-min-icon

சாலை விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும், மதுகுடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுவதால் விபத்துகள் நடக்கிறது என்றும் சேலத்தில் காவலர் நலன் கூடுதல் இயக்குனர் மாகாளி தெரிவித்தார். சாலை விபத்து குறித்து ஆய்வு சாலை விபத்து, உயிர்பலி அதிகம் நடக்கும் இடங்களி

சேலம்,

சாலை விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும், மதுகுடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுவதால் விபத்துகள் நடக்கிறது என்றும் சேலத்தில் காவலர் நலன் கூடுதல் இயக்குனர் மாகாளி தெரிவித்தார்.

சாலை விபத்து குறித்து ஆய்வு

சாலை விபத்து, உயிர்பலி அதிகம் நடக்கும் இடங்களில் எந்த மாதிரியான தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்பதை ஆய்வு செய்வதற்காக 4 மண்டலத்திற்கு ஒரு காவலர் நலன் கூடுதல் இயக்குனரை (ஏ.டி.ஜி.பி.) தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி கோவை மண்டலத்திற்கு காவலர் நலன் கூடுதல் இயக்குனர் மாகாளி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கோவை மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து நடக்கும் பகுதிகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.

இந்தநிலையில், சேலத்தில் விபத்துகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்று காலை காவலர் நலன் கூடுதல் இயக்குனர் மாகாளி, மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், துணை கமிஷனர்கள் ஜோர்ஜிஜார்ஜ், ராமகிருஷ்ணன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், அவர் சேலம் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா, உடையாப்பட்டி தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி சாலை விபத்துகள் நடக்கும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பேட்டி

இதன்பிறகு காவலர் நலன் கூடுதல் இயக்குனர் மாகாளி நிருபர்களிடம் கூறியதாவது:–

சாலை விபத்துகள் முற்றிலும் தடுக்கவும், சாலை விபத்துகளில் உயிர்பலி ஏற்படுவதை தடுக்கவும், தமிழகம் முழுவதும் சென்று ஆய்வு செய்து வருகிறோம். தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்து ஏற்படுவதை தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், போலீஸ் அதிகாரிகள் பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் கருத்து கேட்டு வருகிறோம்.

அதிக சாலை விபத்துகள் நடக்கும் இடங்கள் எது என கண்டறிந்து அங்கு விபத்தை தடுக்க என்னென்ன செய்யலாம்? என ஆய்வு செய்து வருகிறோம். மதுகுடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுவதால் பெரும்பாலான விபத்துகள் நடக்கிறது. எனவே, மதுகுடித்துவிட்டு வாகனங்களை இயக்க மாட்டோம் என ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும். அதேபோல் சாலை விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். இது குறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு செய்து துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்ய இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொப்பூர்–மேச்சேரி ரோட்டில் ஆய்வு

சேலத்தில் சாலை விபத்து குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட காவலர் நலன் கூடுதல் இயக்குனர் மாகாளி, நேற்று மதியம் ஓமலூர் அருகே சேலம்–தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர்–மேச்சேரி பிரிவு ரோட்டில் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர், அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்களான காமலாபுரம், ஆர்.சி.செட்டிப்பட்டி, புளியம்பட்டி, பண்ணப்பட்டி, சந்தைதடம் உள்ளிட்ட இடங்களிலும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், இந்த இடங்களில் விபத்துகளை குறைப்பது பற்றியும், மேம்பாலம் கட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால்அழகு, தேசிய நெடுஞ்சாலைத்துறை டெக்னிக்கல் மேலாளர் ராம்குமார், இன்ஸ்பெக்டர்கள் சிவலிங்கம், ரஜினிகாந்த் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story