கப்பலூர் கிராமத்தில் பயன்பாடற்று கிடக்கும் சுகாதார வளாகம் பணம் செலுத்தியும் குடிநீர் இணைப்பு வழங்காத அவலம்


கப்பலூர் கிராமத்தில் பயன்பாடற்று கிடக்கும் சுகாதார வளாகம் பணம் செலுத்தியும் குடிநீர் இணைப்பு வழங்காத அவலம்
x
தினத்தந்தி 28 Dec 2016 4:15 AM IST (Updated: 27 Dec 2016 9:49 PM IST)
t-max-icont-min-icon

கப்பலூர் கிராமத்தில் பயன்பாடற்று கிடக்கும் சுகாதார வளாகத்தாலும், பல மாதங்களுக்கு முன்பு பணம் செலுத்தியும் குடிநீருக்கான இணைப்பு வழங்காததால், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இணைப்பு வழங்கவில்லை திருமங்கலம்

திருமங்கலம்,

கப்பலூர் கிராமத்தில் பயன்பாடற்று கிடக்கும் சுகாதார வளாகத்தாலும், பல மாதங்களுக்கு முன்பு பணம் செலுத்தியும் குடிநீருக்கான இணைப்பு வழங்காததால், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

இணைப்பு வழங்கவில்லை

திருமங்கலம் ஒன்றியம் கப்பலூர் கிராமத்தில் உள்ள 9 வார்டுகளில் 1500 வீடுகள் உள்ளன. இதில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மனுக்கள் பெறப்பட்டு, அதற்கான டெபாசிட் தொகையாக, ஒரு இணைப்புக்கு ரூ.3 ஆயிரம் என்று வசூல் செய்து ரசீது கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பணம் செலுத்திய 120–க்கும் மேற்பட்டோருக்கு தற்போது வரை குடிநீர் இணைப்பு தரப்படவில்லை.

மேலும் கப்பலூரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இது சரிவர பராமரிப்பு இல்லாததால் மிக மோசமான நிலையில் உள்ளது, இங்குள்ள அறைகளின் கதவுகள் உடைந்தும், மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையிலும் உள்ளன. நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் பசுமை சுகாதார வளாகம் ரூ3½ லட்சம் செலவில் கட்டப்பட்ட இந்த சுகாதார வளாகம் வீணாகி வருகிறது.

மக்கள் பணம் வீண்

அதேபோல கழிவுநீர் வாய்க்கால் குறிப்பிட்ட தூரம் வரை தான் கட்டப்பட்டு உள்ளது. அவ்வாறு கட்டப்பட்ட கழிவுநீர் வாய்க்காலுக்கு பதிக்கப்பட்ட குழாய்களும் முறையாக பதிக்கப்படாததால், கழிவுநீர் ரோட்டில் தேங்கி கிடக்கிறது. புதிய குடியிருப்பை சேர்ந்தவர்கள், அந்த கழிவுநீரில் நடந்து தான் தங்கள் பகுதிக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி கப்பலூரை சேர்ந்த சுதா சந்தோசம், குருசாமி ஆகியோர் கூறியதாவது:– குடிநீர் இணைப்பு பெற பல மாதங்களுக்கு முன்பு ரூ.3ஆயிரம் செலுத்தியும், இது வரை இணைப்பு தரவில்லை. குறிப்பிட்ட சில பகுதியில் மட்டும் இணைப்பு கொடுத்துள்ளனர். சுகாதார வளாகம் கட்டி, மக்களின் பணம் வீணாகிவிட்டது. கழிவுநீர் மக்களின் சுகாதாரத்திற்கு கேள்வி குறியாகி உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து ஊராட்சிகளின் ஆணையாளர் நளினாபரமேஸ்வரியிடம் கேட்ட போது, பணம் கட்டியிருந்தால் குடிநீர் இணைப்பு கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதார வளாகத்தை நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


Next Story