செல்லுமா? செல்லாதா? 10 ரூபாய் நாணயங்களால் நிலவும் குழப்பம் அதிராம்பட்டினத்தில் பொதுமக்கள்–வியாபாரிகள் அவதி


செல்லுமா? செல்லாதா? 10 ரூபாய் நாணயங்களால் நிலவும் குழப்பம் அதிராம்பட்டினத்தில் பொதுமக்கள்–வியாபாரிகள் அவதி
x
தினத்தந்தி 28 Dec 2016 4:15 AM IST (Updated: 27 Dec 2016 10:33 PM IST)
t-max-icont-min-icon

அதிராம்பட்டினம் பகுதியில் 10 ரூபாய் நாணயம் செல்லுமா? செல்லாதா? என்ற குழப்பம் நிலவுவதால் பொதுமக்கள்–வியாபாரிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். குழப்பத்தை ஏற்படுத்தும் நாணயம் கடந்த மாதம் (நவம்பர்) 8–ந் தேதி 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு

அதிராம்பட்டினம்,

அதிராம்பட்டினம் பகுதியில் 10 ரூபாய் நாணயம் செல்லுமா? செல்லாதா? என்ற குழப்பம் நிலவுவதால் பொதுமக்கள்–வியாபாரிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

குழப்பத்தை ஏற்படுத்தும் நாணயம்

கடந்த மாதம் (நவம்பர்) 8–ந் தேதி 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. அதைதொடர்ந்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள அவகாசம் வழங்கப்பட்டது.

பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் அதிராம்பட்டினம் பகுதியில் பொதுமக்கள், வியாபாரிகள் அவதிப்பட்டனர். இந்த பகுதியில் கடுமையான சில்லறை தட்டுப்பாடு நிலவியது. பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ள அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ள மத்திய அரசு அறிவித்த கால அவகாசம் வருகிற 30–ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. அவகாசம் முடிய உள்ள நிலையிலும் அதிராம்பட்டினம் பகுதியில் பணப்புழக்கம் சீராக இல்லை. சில்லறைக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அதேநேரத்தில் 10 ரூபாய் நாணயங்கள் அதிக அளவில் புழங்குகின்றன. இந்த நிலையில் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தி அதிராம்பட்டினம் பகுதி முழுவதும் பரவி உள்ளது. இதனால் 10 ரூபாய் நாணயம் செல்லுமா? செல்லாதா? என்ற நூதன குழப்பத்தில் பொதுமக்களும், வியாபாரிகளும் தவித்து வருகிறார்கள்.

அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் பரவலாக நிலவும் இந்த குழப்பத்தால் பொதுமக்கள்–வியாபாரிகள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதை காண முடிகிறது. இதுகுறித்து பெட்டிக்கடை வியாபாரி வரிசைமுகமது என்பவர் கூறியதாவது:–

பண பிரச்சினையால் பெட்டிக்கடை வியாபாரிகள் முதல் வணிக நிறுவனங்கள் வரை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 10 ரூபாய் நாணயம் செல்லாது என வதந்தி பரவி உள்ளது. இதனால் பலர் 10 ரூபாய் நாணயத்தை வாங்குவதற்கு மறுக்கின்றனர். இது வியாபாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரூ.100 நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டபோது 10 ரூபாய் நாணயத்தை அதிகளவில் சேகரித்து வைத்திருந்தேன். ஆனால் தற்போது இந்த நாணயத்தை பொதுமக்கள் வாங்க மறுக்கின்றனர். செல்லுமா? செல்லாதா? என்கிற குழப்பம் வியாபாரிகள் மத்தியிலும் உள்ளது. 10 ரூபாய் நாணயம் பற்றிய குழப்பம் பொதுமக்கள்–வியாபாரிகள் என 2 தரப்பையும் அவதி அடையச் செய்திருக்கிறது. எனவே 10 ரூபாய் நாணயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story